எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள், நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள் (1 தெச. 2:19-20).
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஐந்து வகையான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அவைகளில் ஒன்று மகிழ்ச்சியின் கிரீடமாகும். இது ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறவர்களுக்காக கர்த்தர் வைத்திருக்கிற கிரீடமாகக் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கையும், சந்தோஷமும், மகிமையும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருக்கிறீர்கள் என்று எழுதினார்.
பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைப் பால் கொடுத்துக் காப்பாற்றுவது போல, பவுல் களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேத வசனத்தை, இரவும் பகலும் வேலை செய்து, தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு கற்றுக் கொடுத்தார். அத்துடன் தேவனுக்குப் பாத்திரவான்களாய் நடக்கவேண்டும் என்று தகப்பனைப் போல அனுதினமும் புத்தி சொன்னார். மீண்டும் தெசலோனிக்கேயாவில் வந்து ஊழியம் செய்ய இயலாத நிலையில் இந்த கடிதத்தை எழுதி, கர்த்தருடைய வருகையில் நீங்கள் தான் எங்களுடைய மகிழ்ச்சியின் கிரீடங்களாகக் காணப்படுவீர்கள் என்று உற்சாகப்படுத்தி, ஆண்டவருக்குள் தொடர்ந்து ஜீவிக்க ஆலோசனையையும் கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சிக்கிறான். நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சிக்கவேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிற ஊழியத்தை உற்சாக மனதுடன் செய்யுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறவர்கள் ஞானவான்கள் என்றும், அனேகரை நீதிக்குள்ளாக நடத்துகிறவர்கள் கர்த்தருடைய வருகையில் நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிப்பார்கள் என்றும் வேதம் கூறுகிறது.
ஒரு மாணவனுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒவ்வொரு ஆத்துமாக்களுக்கும் கர்த்தருடைய ஆலயமும், வசனத்தைக் கற்றுக்கொடுக்கிறவர்களும் முக்கியம். உங்களால் சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களை கர்த்தருடைய ஆலயத்தில் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். அவர்கள் கர்த்தருடைய வசனத்தைக் கேட்கும் படிக்கு நீங்கள் செய்யும்போது, எந்த மனுஷனையும் மாற்றுகிற வல்லமை கர்த்தருடைய வார்த்தைக்கு உண்டு, கர்த்தர் அவர்களை புதிய சிருஷ்டிகளாக மாற்றுவார். ஆண்டவர் பிரசன்னமாகும் போது, அந்த ஆத்துமாவைக் கர்த்தருக்குள்ளாக நடத்தின உங்களுக்கு, அவர் மகிழ்ச்சியின் கிரீடத்தைத் தந்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar