அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் (மத். 16:24).
இயேசு நம்முடைய குரு, நாம் அவரைப் பின்பற்றுகிற, அவருடைய சீஷர்கள். இந்த பூமியில் தோன்றினவர்களில் கவனித்துப் பார்க்கத் தக்க ஜீவியம் செய்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தை ஆண்டவர் கூறின சூழ்நிலையை அறிந்து கொள்வது நல்லது. ஒருமுறை ஆண்டவர் தம்முடைய சீஷரை நோக்கி, மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது இயேசு, நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். உடனடியாக சீமோன் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு சீமோனை நோக்கி, நீ பாக்கியவான், மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்றும், பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பரலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பரலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்ற வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். அதன்பின்பு இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவர் அவனைத் திரும்பிப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவற்றை சிந்தியாவில் மனுஷருக்கு ஏற்றவற்றை சிந்திக்கிறாய் என்று கடிந்து கொண்டார். இயேசுவோடு காணப்படுவதற்கு ஆசை, அவர் யார் என்ற வெளிச்சமும் காணப்பட்டது. ஆனால் அவருடைய சீஷனாக காணப்படுவதற்குரிய கிரயத்தைச் செலுத்த விருப்பமில்லை, குரு கடந்து சென்ற பாதையிலும் விருப்பமில்லை.
இயேசு சிலுவையினூடாய் கடந்து சென்று, எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது மூன்று பேர் ஆண்டவரிடத்தில் வந்தார்கள். ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றவுடன் அவன் காணாமல் போய்விட்டான். வேறொருவனை இயேசு நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார், அவனும் இயேசுவை விட்டு விலகிச்சென்றுவிட்டான். வேறொருவனும் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு வருகிறேன் எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். அவனும் ஆண்டவரைப் பின்பற்றாமல் சென்றுவிட்டான். அவர்களைப் போல இந்நாட்களிலும் இயேசுவின் சீஷனாக காணப்பட ஆசை, ஆனால் அதற்குரிய விலைக்கிரயத்தைக் கொடுக்க யாரும் விரும்புவதில்லை.
இயேசுவைப் பின்பற்றுவதற்கு தன்னைத்தான் வெறுக்கிற ஜீவியம் செய்யவேண்டும், நமக்குப் பிரியமானதையும், விருப்பமானதையும் செய்யாமல், கர்த்தருக்குப் பிரியமானது என்ன என்பதைச் சோதித்து அறிந்து அதைச் செய்யவேண்டும். அத்துடன் நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். இயேசுவின் சிலுவையை அல்ல, நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு என்று எழுதப்பட்டிருக்கிறது. சிலுவை என்றாலே பலியாக மாறுகிற இடம். அனுதினமும் நம்முடைய சிலுவையைச் சுமப்பது என்பது, ஒவ்வொரு நாளும் நம்முடைய மாம்ச சிந்தைகளைச் சிலுவையில் அடித்து, கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன் என்ற சிந்தையில் வாழுகிற வாழ்வு. அதன்பின்பு என்னைப் பின்பற்றக் கடவன் என்று ஆண்டவர் கூறினார், ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் இரண்டு அடிப்படைத் தகுதிகள் காணப்படவேண்டும், ஒன்று தன்னைத் தான் வெறுக்க வேண்டும், இரண்டாவது தன் சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும். அதற்குரிய பலன் நித்தியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. சாதாரண கிறிஸ்தவனாய் ஜீவிப்பவன் கர்த்தருடைய வருகையில் தன் ஜீவனை இழந்து போவான், ஆனால் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்பற்றுகிறவன் நித்தியத்தைக் கண்டடைவான். இப்பூமிக்குரிய வாழ்க்கையில் நித்தியத்திற்குரியவற்றைத் தேட கர்த்தர் நம் அனைவருக்கும் உதவிசெய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar