2 இராஜா 4:7. அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.
ஒரு விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் வந்து தன்னுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசி, அவன் இறந்துபோனான், அவன் பட்ட கடனை எங்களால் அடைக்கமுடியாததால் கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் கடன் வாங்குகிறவர்களாக இருக்கலாகாது. தங்களுடைய நாட்களுக்கு பிறகு, அந்த கடன் பாரம் தன்னுடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் நெருக்கும், அது ஒரு சாட்சியான வாழ்க்கையாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எலிசா அவளை பார்த்து உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். ஒரு குடம் எண்ணையை ஒன்றுமில்லை என்றாள். ஆண்டவர் மோசேயிடம் இதே கேள்வியை உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார். அவன் சொன்னான் என் கையில் ஒரு தடியை தவிர வேறொன்றுமில்லை என்று. பின்னாட்களில் அதை கொண்டு தான் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தான். சாறிபாத் விதவையிடம் ஒரு பிடி மாவு, கொஞ்சம் எண்ணெய் தான் இருந்தது. அதுவே பின்பு பானையிலே மா செலவழிந்து போகாமலும்; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகாமலும் இருந்தது. நீங்களும் கூட சொல்லலாம் என்னிடம் ஒன்றுமில்லை என்று; ஆனால் உங்களிடம் இருக்கும் ஒன்றுமில்லாமையை கொண்டு தான் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
ஒரு குடம் எண்ணெய் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புமையாய் இருக்கிறது. ஒரு சிலர் நினைப்பதுண்டு ஊழியம் செய்ய எனக்கு பணம் இல்லை, வசதி இல்லை, வாய்ப்பு இல்லை, ஐசுவரியம் இல்லை என்பதாக. இதை தவிர பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறாரா என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். ஆம் இருக்கிறார் என்று சொல்லுவீர்களென்றால், அதை தவிர வேறென்ன வேண்டும்? இந்த விதவை அவளுடைய பிரச்சனைக்கான தீர்வு அவளிடம் இருக்கிறது என்பதை உணராதவளாக இருந்தாள். எலிசா சொன்னான் உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி நான் செய்ய சொல்லுவதை செய் என்றான். இயேசுவும் கூட இதை தான் சொன்னார். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு என்று சொன்னார். அங்கே உன் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அங்கே உன் கடன்களை அடைக்கும் தீர்வு கிடைக்கும்.
மாத்திரமல்ல, ஆவிக்குரிய பிரகாரம் நாம் ஒவ்வொருவரும் இரண்டு கடன்களை செலுத்தி தீர்க்க வேண்டும். ஒன்று சுவிசேஷம் சொல்ல கடனாளிகளாய் இருக்கிறோம். பவுல் சொல்லுகிறார் கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன் (ரோம 1:14-15). இரண்டாவது, மற்றவர்கள் மீது அன்பு செலுத்த கடனாளிகளாய் இருக்கிறோம். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோம 13:8). இந்த இரண்டு கடன்களை செலுத்தி தீர்க்க நமக்கு பணம் வேண்டுமா ? இல்லை சொந்த திறமை வேண்டுமா? இல்லை. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேண்டும். அதை பெற்றுக்கொள்ள தான் அப்போஸ்தலர்கள் மேல் வீட்டறையில் காத்திருந்தார்கள். ஆகையால் உங்கள் கடனை செலுத்தி தீர்க்க பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org