ஏசாயா 41:9 நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
இஸ்ரவேல் ஜனங்கள் அநேக முறை கர்த்தரை கோபப்படுத்தினவர்கள், அநேகமுறை கர்த்தரை விட்டு தூரம் சென்றவர்கள், சோரம் போனவர்கள். இருந்தாலும் கர்த்தர் அவருடைய அளவற்ற கிருபையினாலும், பொறுமையினாலும் அவர்கள் மனம் திரும்ப சில சந்தர்ப்பங்களை கொடுத்துக்கொண்டே வந்தார். உங்களுக்கும் கர்த்தர் சந்தர்ப்பத்தை கொடுப்பார். சிலர் நினைக்கலாம் நான் ஆண்டவரை விட்டு பல மைல் தூரம் சென்றுவிட்டேன். என்னுடைய மாம்சீக இச்சைகளால் இழுக்கப்பட்டு, நண்பர்களின் சகவாசத்தால், என்னுடைய சுயத்திற்கு என்னை விற்றுப்போட்டு விட்டேன். என்னால் மீண்டும் தேவனுடைய அன்பிற்குள்ளாக வரமுடியவில்லை என்று அங்கலாய்த்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட உங்களை பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார் நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று. நீங்கள் செய்த சில தவறுகளினிமித்தம் உலகம் உங்களை வெறுத்திருக்கலாம், குடும்பம் வெறுத்திருக்கலாம், உறவினர்கள் வெறுத்திருக்கலாம். ஆனால் இயேசு உங்களை வெறுக்கவில்லை. மீண்டும் அவருடைய கரத்திற்குள்ளாக வர சந்தர்ப்பத்தை கொடுக்கிறார்.
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். முந்தின காலத்தில் நீங்கள் எடுத்த தவறான முடிவுகள், முந்தின காலத்தில் நீங்கள் மீறின பாவம், முந்தின காலத்தில் நேர்ந்த சோகம், தோல்வி, பற்றாக்குறை இவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டாம். அது உங்களை இன்னும் பின்னோக்கி எடுத்து செல்லும். ஒரு சமயம் மோசே கோபப்பட்டு ஒரு எகிப்தியனை அடித்து கொன்றதுபோல, சில தவறுகளை மீறி செய்திருக்கலாம். அதையே சிந்தித்து கொண்டிருக்காதிருங்கள். கர்த்தர் புதிய காரியத்தை உங்களுக்கு செய்வார். காரணம் அவர் உங்களை வெறுக்காதவர்.
திருமணமான தம்பதியினர், சில வருடங்கள் கழித்து ஒருவர் மற்றவரை வெறுத்துவிட்டார்கள்; இருவரும் சொன்ன காரியம், ஒருவர் மாற்றி ஒருவர் சொன்னார்கள், நீ இப்பொழுது அழகாக இல்லை என்று. உலக சிநேகம் இப்படிப்பட்ட வெறுப்பை கொண்டுவருகிறது. ஆனால் கருப்பாக இருந்தாலும் சூலமித்தி அழகாக தான் இருந்தாள் என்று வேதம் சொல்லுகிறது. அதுபோல, உங்கள் நிறம், உயரம், சரீரம், எப்படியாக இருந்தாலும், உங்களை கர்த்தர் நேசிக்கிறார். அவர் உங்களை வெறுத்துவிடவில்லை. அம்மோன் தாமாரை வெறுத்ததை போல நீண்ட நாள் காதலித்தவர்கள் உங்களை வெறுத்துவிடலாம், நண்பர்கள் வெறுத்துவிடலாம், யார் வெறுத்தாலும் சரி, கவலைப் படாதிருங்கள். அண்ட சராசரங்களை படைத்தவர் உங்களை வெறுத்துவிடவில்லை.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org