ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு சமயம் காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்று மாற்கு 12:41ல் வாசிக்கலாம். தேவனுடைய பார்வையில் காணிக்கை முக்கியமானது! நாம் எவ்வளவு செலுத்துகிறோம் என்பதைவிட, நம்முடைய காணிக்கைகளை தேவன் அங்கீகரிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.
காயீன் மற்றும் ஆபேல் இருவரும் காணிக்கைகளை செலுத்தினார்கள் என்றாலும் தேவன் ஆபேலையும் அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார்(ஆதியாகமம் 4:4) . காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. (ஆதியாகமம் 4:5).
சங்கீதக்காரன் தாவீது “ நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக” என்று சங்கீதம் 20:3 ல் பாடுகிறார்.
மோசே தேவனை நோக்கி “அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக” என்று முறையிடுவதைக் குறித்து எண்ணாகமம் 16:15 ல் வாசிக்கலாம்.
மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது ‘தான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப் போகிற தர்ம சகாயம் அவர்களால் அங்கீகரிக்கப்படும் படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பம் செய்யும்படி வேண்டிக் கொண்டார்’ – ரோமர் 15:31
ஆதித் திருச்சபை பரிசுத்தவான்கள் குறைவில் இருந்தாலும், அவர்களிடத்தில் கொடுக்கிற தர்ம சகாயம் அவர்களால் அங்கீகரிக்கும் படி ஜனங்கள் விண்ணப்பம் பண்ணினார்கள்!
எனவேதான் நாம் செலுத்தும் காணிக்கைகளை தேவன் அங்கீகரிக்கும்படி வேண்டுதல் செய்ய வேண்டும். நம்முடைய காணிக்கையை தேவன் அங்கீகரிக்க வேண்டும் என்றால் முதலாவது நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு முன்பாக சரியானதாக இருக்க வேண்டும். (ஆதி 4:4). மற்ற மனிதர்களுடன் எந்தவித கசப்பும் இருக்கக்கூடாது (மத்தேயு 5:23,24).
தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் குற்றமற்ற மனசாட்சியை உடையவர்களாய் இருக்க பிரயாசப்பட வேண்டும் ( அப்போஸ்தலர் 24:16)
அப்பொழுது நாம் ஜெபத்தோடு செலுத்துகிற காணிக்கைகளை தேவன் அங்கீகரிப்பார்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org