2 இராஜா 7:9. பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அந்த பஞ்சம் பெற்ற பிள்ளைகளை சமைத்து தின்ணும் அளவிற்கு கொடூரமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் குஷ்டரோகிகள் நான்கு பேர் பட்டணத்திற்கு வெளியே இருந்தார்கள். பட்டணத்திற்குள் போனால் கொடிய பஞ்சத்தினிமித்தம் சாவு வரும்; இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் சாவு நமக்கு முடிவு என்பதால் நாம் சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி போனார்கள். ஆனால் ஆண்டவர் இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும் சீரிய இராணுவத்திற்கு கேட்கப்பண்ணி அவர்களை ஓட வைத்தார். அவர்கள் நான்கு பேரும் சீரிய இராணுவம் விட்டுச்சென்ற கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டார்கள். இந்த நற்செய்தியை சமாரிய தேசத்தின் இராஜாவுக்கு அறிவித்தால் தேசத்தில் நிலவும் பஞ்சம் முடிவுக்கு வரும் என்று எண்ணி இந்த நான்கு பேரும் நற்செய்தியை அறிவிக்க காலம் தாமதிக்காமல் கடந்து சென்றார்கள்.
சிலருக்கு பொதுவாக ஒரு குணாதிசயம் காணப்படுகிறது; என்னவென்றால், அவர்கள் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் காட்டுகிற ஆர்வத்தை விட துற்செய்தியை அறிவிக்கவே வேகமாக செயல்படுவார்கள். ஒருவருக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற செய்தியை பரப்புவதை காட்டிலும்; அவருக்கு வேலை பறிபோனது என்று சொல்வதையே நாடுவார்கள். அநேகநாள் காத்திருப்புக்கு பிறகு ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது, அநேக வருடத்திற்கு பிறகு ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது, நாட்டில் நல்ல பிரதமர் வெற்றிபெற்றுள்ளார், என் வயதான பெற்றோர்களுக்கு இருந்த வியாதி குணமானது போன்ற நற்செய்தியை காட்டிலும் மேலான நற்செய்தி ஒன்று காணப்படுகிறது. கிறிஸ்து உங்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்தது தான் மேலான நற்செய்தி (Good News / Gospel). பல வருடங்களாக நாமும் பாவம் என்னும் குஷ்டரோகத்தில் இருந்தோம், அதிலிருந்து விடுபடமுடியாமல் பஞ்சத்தில் இருந்தோம். ஆனால் இப்பொழுது கிறிஸ்து உங்களுக்காக பாடுபட்டு, சிலுவையில் மறித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, நீ என்னுடையவன் என்று சொல்லி மீட்டெடுத்தார். இன்றும் கோடான கோடி ஜனங்கள் இவ்வகையான பஞ்சத்திற்குள் இருக்கிறார்கள். நீங்கள் பெற்ற இரட்சிப்பு என்னும் நற்செய்தியை, தாமதிக்காமல் அநேகருக்கு சொல்ல தீவிரமாக செயல்பட வேண்டும்.
உலகத்தில் பல தேசங்களில் நற்செய்தி நாள் என்று சொல்லி ஒரு சில நாளை நியமிப்பார்கள். சில தேசத்தில் டிசம்பர் முதல் வெள்ளிக்கிழமை நற்செய்தி நாளாக அனுசரிக்கப்படுகிறது; சில தேசத்தில் மே மாதத்தில் ஒரு நாள் நற்செய்தி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் பாரம்பரியமாக ஒரு நாள் மாத்திரம் நற்செய்தியை அறிவித்து விட்டுவிடலாகாது. வசனம் சொல்லுகிறது “இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்”. ஒவ்வொருநாளும் கிறிஸ்து உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பை பலருக்கும் தெரிவிக்கும் உன்னத ஊழியத்தை செய்திட ஒவ்வொருவரும் உறுதியெடுங்கள்.
நாமெல்லாருக்கும் ஒரே வேலை இருக்கட்டும். நாம் இந்த ஒன்றுக்காகவே வாழ்கிறோம், நமது ஆத்துமாக்களையும், நம் பிரசங்கத்தை கேட்பவர்களின் ஆத்துமாக்களையும் இரட்சிப்பதற்காகவே. – ஜான் வெஸ்லி.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org