பர்திமேயுவின் விசுவாசம்.

இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்  என்றார். அதற்கு அந்த குருடன்: ஆண்டவரே,    நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம்,    உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து,    வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான் (மாற்கு 10:51,   52).

இயேசு சிலுவையில் மனுகுலத்திற்காக ஜீவனைக் கொடுப்பதற்கு முன்பு,    கடைசி முறையாக எருசலேமிற்கு எரிகோவின் வழியாக வந்தார். எரிகோவிலிருந்து அவர் புறப்படும் போது பர்திமேயு என்கிற  ஒரு குருடன்,    வழியருகே உட்கார்ந்து,    பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். அவன் எத்தனை வருடங்களாய் குருடனாய் காணப்பட்டான் என்று அறிய முடியவில்லை,    ஆனால் இயேசு வருகிறார் என்ற நற்செய்தி அவன் செவிகளில் விழுந்தவுடன் அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். இனி ஒரு முறை இயேசு அவ்வழியாய் வருவதில்லை,    இது அவனுக்குக் கிடைத்த கடைசி தருணம். ஆகையால்,    இயேசுவே,    தாவீதின் குமாரனே,    எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். ஆண்டவர் உங்களைச் சந்திக்கவும்,    இரட்சிக்கவும் ஒரு வேளையை நியமித்திருக்கிறார்,    அதுபோல உங்கள் ஒவ்வொருவருடைய தேவைகளைச் சந்திக்கவும் ஒரு நேரத்தை வைத்திருக்கிறார்,    அந்த நாள் இந்நாளாய் காணப்படுகிறது. ஆகையால் வேளையை அறிந்து,    அவருடைய இரக்கத்திற்காக அவரை நோக்கி முறையிடுங்கள். அவரை உங்களை விட்டுக் கடந்து செல்ல அனுமதித்து விடாதிருங்கள். 

இயேசுவோடு கடந்து வந்தவர்கள்,    பர்திமேயு பேசாதிருக்கும் படிக்கு அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று இன்னும் அதிகமாகக் கூப்பிட்டான். இயேசுவோடு வந்தவர்களால் அவன் கூப்பிடுதலை நிறுத்த முடியவில்லை,    அவனுடைய மனவுறுதி இன்னும் அதிகமாய் கூப்பிடும் படிக்குச் செய்தது. உங்களைச் சுற்றிக் காணப்படுகிறவர்கள் அனேக வேளைகளில் உங்களில் விசுவாசக் குறைச்சலை உண்டாக்கலாம்,    அவ்விசுவாசமான வார்த்தைகளைப் பேசலாம்,    ஆனால் நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள்,    உங்கள் தேவைகளுக்காக ஆண்டவரை நோக்கி இடைவிடாமல் விசுவாசத்தோடு முறையிடுங்கள். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது,    பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் தட்டிக் கொண்டே காணப்படுங்கள்,    எப்பாப்பிராவைப் போல ஜெபத்திலே எப்பொழுதும்  கர்த்தரோடு போராடுங்கள். 

இயேசு அவனுடைய கூப்பிடுதலைக் கேட்டு நின்று,    அவனை அழைத்து வரும்படிக்குச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை  அழைத்து: திடன்கொள்,    எழுந்திரு,    இயேசு அழைக்கிறார் என்றார்கள். ஆண்டவர் நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கிறவர்,    நமக்காக நிற்கிறவர். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற காக்கை குஞ்சின் சத்தத்தைக் கேட்டு ஆகாரம் கொடுக்கிறவர். ஆகையால்,    உங்கள் கூப்பிடுதலைக் கேட்டு,    நின்று பதில் கொடுப்பது நிச்சயம். சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு அவருடைய சமூகத்தைத் தட்டுங்கள். பர்திமேயு தன் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு,    எழுந்து இயேசுவிடத்தில் வந்தான். குருடனுக்குரிய,    பிச்சைக் காரன் என்ற மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு,    இனி அதே இடத்தில் அவ்வண்ணம் அமருவதில்லை என்ற விசுவாசத்தோடு ஆண்டவரண்டை வந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே,    விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியம்,    அவரிடத்தில் சேருகிறவன் அவர் பலனளிக்கிறவர் என்ற உறுதியான விசுவாசத்தோடு அவரண்டை வரவேண்டும்,     விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். இயேசுவால்  உங்களுடைய இன்றைய நிலைமையை மாற்றி,    உங்களுக்கு ஒரு அற்புதம் செய்து,    உங்களை மகிழப்பண்ணமுடியும்.

இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்,    அதற்கு பர்திமேயு,    ஆண்டவரே,    நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு எல்லாவற்றையும் அறிந்தவராயிருந்தும் அவனுடைய தேவையை அவன் மூலம் அறிய விரும்பினார். அவனும் ஒரே வார்த்தையில் நான் பார்வையடைய வேண்டும் என்று கூறினான். ஆண்டவர் உங்களுடைய எல்லா தேவைகளை அறிந்தவராயிருந்தும்,    நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும்,    உங்கள் காரியங்களைச் சொல்ல வேண்டும் என்றும் விரும்புகிறவர். ஆகையால் உங்கள் தேவைகளைக் கருத்தாக ஆண்டவரிடம் கூறிவிடுங்கள். இயேசு பர்திமேயுவை நோக்கி: நீ போகலாம்,    உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றவுடன் அவன் பார்வையடைந்து,    வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். ஆண்டவர்,    அவனைப் பார்த்து உன் விசுவாசத்தின் படி உனக்கு ஆகட்டும் என்றும்,    உன் வழியே நீ போ என்று கூறியபோதும்,    பர்திமேயுவுக்கு உலகத்தில் காணப்படுகிற வழிகளிலெல்லாவற்றையும் விட இயேசுவைப் பின்பற்றுகிற வழியே மேலானது என்பதை அறிந்து அவரைப் பின்சென்றான். இயேசுவோடு கூட சுமார் 17 மைல் தொலைவில்  உள்ள எருசலேமுக்கு மரிக்குப்படிக்குக் கடந்து சென்ற ஆண்டவருக்கு பின்சென்றான். கர்த்தர் நம்முடைய கூப்பிடுதலைக் கேட்டு பதில் தந்த வேளைகள் அனேகம்,    வியாதிகளிருந்து,    கஷ்டங்களிலிருந்து,    கண்ணீரிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார்.  ஆனால் அவருடைய பாதச்சுவடுகளை பின்பற்றுகிறவர்களாய்,    சிலுவையின் பாதையில் கடந்து செல்லுகிறவர்களாய் காணப்படுகிறோமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. பர்திமேயுவைப் போல நன்மைகளைப் பெற்ற நாமும் ஆண்டவரை வாழ்நாள் முழுவதும் பின்பற்றி ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *