உங்களுக்கு ஆதரவாயிருப்பார்:-

2 இராஜா 19:34. என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

ஆசீரிய இராஜாக்கள் யூதாவுக்கு விரோதமாக வந்தார்கள். ஆசீரியர்கள் பலத்தவர்களை போல காணப்பட்டார்கள். யூதாவின் இராஜா எதிராக இருக்கிற பெரிய எதிரியை பார்த்து கலங்கி கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய சேனை எனக்கு விரோதமாக இருக்கிறதே என்ற அச்சம். இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு இருக்கிறதை போல காணப்படலாம். உலகத்தில் அசீரியர்களை எதிர்த்து நிற்க பெலனில்லாமல் காணப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எசேக்கியா இராஜா இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். கர்த்தர் விண்ணப்பத்தை கேட்கிறவர். பின்பு கர்த்தர் சொல்லுகிறார் அசீரிய இராஜா இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. மாத்திரமல்ல இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு நான் ஆதரவாய் இருப்பேன் என்று சொன்னார்.

உங்கள் தேவன் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார். உலகத்தின் மனிதர்கள், பெரிய அரசியல்வாதிகள், தலைவர்களின் ஆதரவு உங்களுக்கு இல்லாமல் இருந்தாலும் கர்த்தர் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார். அவர் உங்கள் பட்சத்தில் இருக்கும்போது உங்களுக்கு விரோதமாக நிற்பவன் யார்? ஒருவனும் உங்களுக்கு விரோதமாக கைகளை உயர்த்த முடியாது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அரசியல்வாதிகள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள். அவர்கள் வெற்றிபெற சில அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கும். ஆனால் இதைக்காட்டிலும் பெரிய ஆதரவு உங்களுக்கு காணப்படுகிறது. அவர் அப்பம் என்னும் ஆதரவு கோலை முறிக்காதவர்.

பின்பு கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான். ஒரு தூதன் ஒரே இரவில் 180,000 பேரை சங்கரித்தான். இயேசு கெத்சமனே தோட்டத்தில் பேதுருவிடம் சொன்னார் நான் பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று கேட்டார். ஒரு லேகியோன் என்பது 6000 தூதர்கள், ஆக 72,000 தூதர்களை கர்த்தர் ஒரே நேரத்தில் உங்களுக்கு ஆதரவாக அனுப்பினால் என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள். ஒரு தூதன் 180,000 பேரை சங்கரித்தால், 72,000 தூதர்கள் சுமார் 13 பில்லியன் பேரை சங்கரிப்பார்கள். இது இப்பொழுது இருக்கும் உலக ஜனத்தொகையில் இரண்டு மடங்கு அதிகம். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ளுங்கள். யாரும் எனக்கு ஆதரவாக இல்லை என்று நினைக்காதிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *