கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாக இருக்கும்படியாக வேதத்தில் நமக்கு லூக் 17:34-36 வரை ஆவியானவர் எழுதியிருக்கிறார். இங்கே இரண்டு படுக்கைகளை காண்பிக்கிறார். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளை காண்பிக்கிறார். வயலிலிருக்கிற இரண்டுபேரை காண்பிக்கிறார். அவர்களில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான் என்று சொன்னார்.
இவற்றில் கர்த்தர் சொல்லுகிற காரியம் என்ன? ஆபேலும், காயீனும் ஒரு பெற்றோரின் பிள்ளைகள். ஆனால் ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார். காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்கவில்லை.
யாக்கோபும், ஏசாவும் ஈசாக்குக்கு பிறந்த பிள்ளைகள். அதுவும் இரட்டை பிள்ளைகள். ஆனால் யாக்கோபு தன் சகோதரனுடைய சேஷ்டபுத்திரபாகத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும், கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும் பெற்று இஸ்ரவேலராய் மாறினார். ஆனால் ஏசாவின் நிலைமையோ பரிதாகமாக இருந்தது.
சாராளும், ஆகாரும் ஆபிரகாமுக்கு மனைவியாய் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் சாராளின் பக்கத்திலே இருந்தார். ரூத்தும், ஓர்பாளும் நகோமியின் இரண்டு மருமக்களாய் இருந்தார்கள். ஓர்பாள் தன் மாமியை முத்தம் செய்துவிட்டு பின்வாங்கி போனாள். ஆனால் ரூத் கர்த்தரை பின்பற்றி, கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றாள்.
ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் இளைய குமாரன் தன்னுடைய ஆஸ்திகளை பிரித்துக்கொண்டு வேசிகளிடம் செலவழித்துவிட்டான். ஆனால் மூத்த குமாரனோ கடைசிவரை தன் தகப்பனுக்கு உண்மையும் உத்தமமான குமாரனாக வாழ்ந்தான்.
பத்து கன்னிகைகளை ஆண்டவர் இரண்டாய் பிரித்தார். புத்தியுள்ள கன்னிகைகள் பாத்திரத்தில் எண்ணெய் இருந்தது. வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். புத்தியில்லாத கன்னிகைகள் பாத்திரத்தில் எண்ணெய் இல்லை. அவர்கள் வருகையிலே கைவிடப்பட்டார்கள்.
மார்த்தாளும், மரியாளும் ஒரே வீட்டை சேர்ந்தவர்கள். மரியாளோ தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள். மார்த்தாள் அந்த பங்கை தெரிந்துகொள்ளவில்லை. இரண்டு வகையான சந்தோசங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டது. அவன் கர்த்தருடைய ஜனங்களோடு பாடநுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.
இயேசு எந்த நேரத்தில் வருவார் என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் சீக்கிரமாய் வரப்போகிறார். ஆகையால் இரண்டு பேரில் கைவிடப்பட்ட ஜனங்களாக நாம் இருக்கலாகாது. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள் (மாற் 13:35,36).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org