நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார் (சங். 118:5).
சங்கீதக்காரன் நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட வேளையில், கர்த்தர் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்டு, அவனுடைய எல்லா நெருக்கங்களையும் மாற்றி, அவனை விசாலத்தில் வைத்தார். அதுபோல, புதிய மாதத்தில் பிரவேசிக்கிற உங்கள் அனைவருடைய விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் கேட்டு, உங்கள் எல்லா நெருக்கங்களையும் மாற்றி, உங்களை விசாலத்தில் வைப்பார். ஈசாக்கு துரவுகளை வெட்டி தண்ணீர் கிடைத்தவுடன், கேராரூர் மேய்ப்பர்கள் வந்து அவனோடு வாக்குவாதம் செய்து, அவனிடத்தில் வெறுப்பைக் காட்டினதினால், அந்த துரவுகளுக்கு ஏசேக்கு, சித்னா என்று பேரிட்டான். அவ்விடத்தில் அவன் நெருக்கப்பட்டதினால் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான், அங்கே அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை, அப்பொழுது அவன், நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அந்த கிணற்றுக்கு ரெகொபோத் என்று பேரிட்டான். ரெகொபோத் என்பதற்கு விஸ்தாரமான இடம் என்று அர்த்தம். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருடைய நெருக்கங்களையும் மாற்றி, புதிய ஆசீர்வாதங்களைத் தந்து, விஸ்தாரமடையும்படிக்குச் செய்வார்.
உங்கள் வாழ்க்கையில் நெருக்கங்கள் வரும்போது, சங்கீதக்காரனைப் போலக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். மனுஷனையும், பிரபுக்களையும் நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று அதே சங்கீதம் கூறுகிறது. மனுஷர்கள் தயவு பண்ணினாலும், உதவிகள் செய்தாலும், எல்லா நேரங்களிலும் அவர்களால் கூடாது. ஆனால் எந்த நேரங்களிலும், நம்முடைய நெருக்கங்களின் மத்தியில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது, நமக்கு உதவி செய்கிற நல்ல தேவன் அவர். யோனா மீனின் வயிற்றிலிருந்து, தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு உத்தரவு அருளினார், நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், தண்ணீர்கள் பிராண பரியந்தம் என்னை நெருக்கினது, ஆழி என்னைச் சூழ்ந்தது, கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது, அவர் என் சத்தத்தைக் கேட்டார் என்றான். துணிகரமாய் கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகி ஓடினதினால் அவனுடைய வாழ்க்கையில் நெருக்கம் வந்தது. ஆகிலும் அந்த நெருக்கப்பட்ட வேளையில் தன் தவற்றை உணர்ந்து கர்த்தரை நோக்கி முறையிட்டவுடன் அவர் அவனுடைய நெருக்கத்தை மாற்றினார். அமலேக்கியர்கள் தாவீதின் குடும்பத்தாரையும், அவனோடு காணப்பட்டவர்களுடைய குடும்பத்தாரையும் சிறைபிடித்துக் கொண்டு போனவேளையில், தாவீது மிகவும் நெருக்கப்பட்டான், சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள், தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கர்த்தரை நோக்கி, நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர், அதைப் பின்தொடர், நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அப்படியே தாவீது ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் நெருக்கங்கள் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டதாயிருந்தாலும் சரி, உங்கள் மீறுதல்களினிமித்தம் வந்ததாய் காணப்பட்டாலும் சரி, நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது, இந்த புதிய மாதத்தில் உங்களை விடுவித்து, உங்களை விசாலத்தில் வைப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar