லூக் 17:34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
ஒரே படுக்கையில் இரண்டு பேர் படுத்தியிருக்கிறார்கள். படுக்கை என்பது இளைப்பாறுதலை குறிக்கிறது. ஒரு கூட்டத்தார் இயேசுவின் மார்பில் சாய்ந்து, அந்நியபாஷை பேசி இளைப்பாறுகிறார்கள். ஆனால் அடுத்த கூட்டத்தாரோ, கர்த்தருடைய சமூகத்தில் இளைப்பாறாமல், உலக கவலைகளாலும், லௌகிக பாரங்களாலும் இளைப்பற்று இருக்கிறார்கள். சிலர் குடித்து வெறித்து, விபசார சிந்தையோடு தன்னுடைய படுக்கைக்கு செல்வார்கள். அவர்களின் படுக்கை அசுத்தமாக காணப்படும். சிம்சோன் வேசியாகிய தெலீலாலின் மடியில் படுத்து, மெய் மறந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய தலை மயிர் சிறைக்கப்பட்டதும், ஆவியானவர் தன்னை விட்டு கடந்து சென்றதும் அறியாமல் இருந்து, முடிவில் பெலிஸ்தியரோடு கூட மடிந்துபோனான். இரவு வேளையில் என்ன சம்பவிக்கும் என்று யாரும் அறியோம். குஜராத்தில் இரவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் அநேகர் மாண்டுபோனார்கள். அவர்கள் இரவில் தூங்க சென்றபோது எந்த நிலைமையில் படுக்கைக்கு சென்றார்களோ நாம் அறியோம்.
வேதம் சொல்லுகிறது பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள் (சங் 149:5). நீங்கள் இரவிலே படுக்கும்போது ஆவியில் நிரம்பி, கர்த்தரை துதித்து அவரை எப்போதும் சந்திக்க ஆயத்ததோடு படுக்கைக்கு செல்லுங்கள். நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன் (உன் 5:2). இரவிலே படுக்கும்போது உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய கோபமும், எரிச்சலும் சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாகவே தணிந்துவிடக்கடவது. குடும்பமாய் கரம் கோர்த்து ஜெபித்து படுக்கைக்கு செல்லுங்கள்.
ஒரு ஊழியக்காரரிடம் ஒரு சகோதிரி கண்ணீரோடு சொன்னார்கள் ஐயா எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் கணவருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது என்று எனக்கு தெரியாது. அவர் அந்த பெண்ணோடு படுக்கையில் இருக்கும்போது இருதயநோய் தாக்கி அவர் மரித்துப்போனார். அவர் எப்படி கர்த்தரை சந்திப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இதனால் எனக்கு வெட்கமும் அவமானமுமாக இருக்கிறது என்று சொன்னார்.
ஆகையால் உங்கள் படுக்கையில் எப்போதும் தேவனுக்கு உகந்ததாகவும், பரிசுத்தமாகவும், உங்கள் இருதயங்களில் கர்த்தரை சிந்தித்துக்கொண்டும் இருங்கள். அப்பொழுது உங்கள் படுக்கை இன்பமாய் இருக்கும். கர்த்தருடைய வருகையில் பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள் (தானி 12:2).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org