யோபு 1:1. ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
யோபு ஆபிரகாமுக்கு முன்பாக வாழ்ந்தவன். நோவாவுக்கும் ஆபிரகாமுக்கு இடைப்பட்ட நாட்களில் வாழ்ந்தவன். வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளது. முதல் ஐந்து ஆகமங்கள் கி.மு 1500 வருடங்களுக்கு முன்பாக மோசே என்ற பக்தனால் எழுதப்பட்டது. ஆகையால் யோபுவின் சரித்திரமும் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றில் கவனிக்கவேண்டிய காரியம் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த ஒரு நபரை பற்றி எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவற்றிலிருந்து ஆண்டவர் உத்தமத்தை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். ஆண்டவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் உத்தமனை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஏனோக்கின் காலத்தில், நோவாவின் காலத்தில், யோபின் காலத்தில் இப்பொழுது நம்முடைய காலத்திலும் உத்தமனை எதிர்பார்க்கிறார். பரிசுத்த ஆவியானவர் 66 புத்தகங்களை எழுதவேண்டும் என்று முதலிலே திட்டம் பண்ணியிருந்தாலும், அவர் முதலாவது தெரிந்தெடுத்தது, ஒரு உத்தமனை பற்றி எழுதுவது தான்.
ஒரு மனிதனை குறித்து, குறிப்பாக எந்த ஊரை சேர்ந்த மனிதன், அவனுடைய பெயர் யோபு என்று தெளிவாக ஆவியானவர் எழுதுகிறார். ஆவியானவர் அவனை குறித்து சாட்சி கொடுக்கும்போது அவனுக்கு இருந்த வீடு, நிலம், ஐஸ்வரியம், பொருளாதாரம், மக்கள் செல்வாக்கு போன்றவற்றை சொல்லவில்லை. மாறாக அவர் சொன்னது யோபின் குணாதிசியங்கள் அவன் உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்து நடப்பவன், பொல்லாப்பு விலகுகிறவன் என்பதாக. இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம் தேவன் நம்மிடம் முதலாவது எதிபார்ப்பவைகள் என்ன என்பதை.
சிலர் சொல்லுவதுண்டு யோபின் சரித்திரம் ஒரு கட்டுக்கதை என்று. ஆனால் இவை ஒரு உண்மை சம்பவம் என்பதை நிரூபிக்கவே கர்த்தர் அவனை குறித்து எசேக்கியேல் புஸ்தகத்தில் குறிப்பிடுகிறார். வேதாகமத்தில் மூன்று நபர்கள் நீதிமான்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை எசேக்கியேல் 14:14,20 போன்ற வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் (யாக் 5:11) என்றும் வசனம் சொல்லுகிறதை பார்க்கலாம்.
ஆகையால் யோபின் சரித்திரம் நமக்கு ஒரு பாடமாகவும், ஆண்டவர் எதிர்பார்க்கும் உத்தமம் நமக்குள்ளாகவும் காணப்பட வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org