மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் மூன்று முறை இயேசு சொல்லுகிறார் உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். பிதாவானவர் உங்களுக்கு வெளியரங்கமாகப் பலனளிக்கவேண்டுமென்றால் மூன்று முக்கியமான காரியங்களை தேவ பிள்ளைகள் செய்யவேண்டும்.
முதலாவதாக, நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத் 6:3,4). இவ்வுலகத்தில் ஐஸ்வரியவான்கள் இருக்கிற அதே சூழ்நிலையில் தரித்திரரும் இருக்கிறார்கள். ஏன் தரித்திரர் இருக்கிறார்களென்றால், உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். நீங்கள் செய்கிற தர்மம் உங்கள் கைகளுக்கே தெரியாத அளவிற்கு அந்தரங்கத்தில் (In Secret) செய்ய வேண்டும். இந்நாட்களில் பல சபைகளில் நாற்காலியோ, மின்விசிறியோ வாங்கி கொடுத்தால் அவர்களுடைய பெயரை அன்பளிப்பு என்று சொல்லி எழுதிவிடுவார்கள். அப்படியாக இல்லாமல் அந்தரங்கத்தில் தர்மம் செய்யும்போது, நிச்சயமாகவே பிதாவானவர் வெளியரங்கமாக, எல்லாரும் காணும்படியாக உங்களுக்கு பலனளிப்பார்.
இரண்டாவதாக, நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத் 6:6). பொதுவாக யூதர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாரோ எழுதி கொடுத்த ஜெபங்களை உணராமல், முழ இருதயத்தோடு ஜெபிக்காமல், சற்றே வழக்கம்போல வாசிப்பார்கள். இன்றும் அநேகர் நான் பல மணிநேரம் ஜெபிக்கிற நபர் என்று தங்களை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். அப்படியாக தேவ பிள்ளைகள் இல்லாமல், உங்கள் அறை வீட்டை பூட்டி, தனித்து, யாருக்கும் கேட்காமல், பிதாவோடுகூட அந்தரங்கத்தில் (In Secret) விண்ணப்பங்களை ஏறெடுங்கள். பரலோகத்தில் அவருடைய சித்தம் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்ய விண்ணப்பங்களை ஏறெடுங்கள். அப்பொழுது பிதாவானவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்றாய் அறிந்து, என் பிள்ளைக்கு இந்த கஷ்டம் இருக்கிறதே, இந்த குறிப்பிட்ட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறானே, கலங்குகிறானே, கண்ணீர் வடிக்கிறானே என்று அறிந்து அவைகளெல்லாவற்றிலும் விடுதலையாக்கி உங்களுக்கு பிதாவானவர் வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
மூன்றாவதாக, நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத் 6:17,18). அநேகர் தாங்கள் உபவாசம் செய்வதை மற்றவர் காணும்படியாக முகங்களை வாடவைத்து, தாங்கள் பரிசுத்தவான்கள் என்று காண்பித்துக்கொள்ளுவார்கள். தேவ பிள்ளைகள் எப்படி உபவாசிக்க வேண்டும்? அந்தரங்கத்தில், யாரும் அறியாதவாறு, எதற்காக உபவாசம் இருக்கிறீர்கள் என்று தூற்றி திரியாதவாறு உபவாசிக்க வேண்டும். ஏதோ ஒரு காரியங்கள் கைகூடி வரவேண்டும் என்று அந்தரங்கத்தில் உபவாசிக்கிறீர்களா? உங்கள் கண்ணீர், துக்கம் மாற, கதறி அழுது அந்தரங்கத்தில் உபவாசிக்கிறீர்களா? கவலை படைத்திருங்கள். காரணம் உங்கள் பிதா வெளியரங்கமாய் உங்களுக்கு பலனளிப்பார்.
இந்த மூன்று காரியங்களையும் நீங்கள் அந்தரங்கத்தில் (In Secret) செய்யும்போது, உங்கள் பிதா உங்களுக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (Reward you).
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org