லுக் 12:34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
முகேஷ் அம்பானியிடம் உங்கள் பொக்கிஷம் எங்கே என்று கேட்டால் அவர் சொல்லுவார் என்னுடைய வீடு தான் என் பொக்கிஷம். பம்பாய் பட்டணத்தில் மிக உயர்ந்த விலைமதிப்புள்ள வீடு என்னுடைய வீடு தான் என்பார். சிலர் சொல்லுவார்கள் என் பொக்கிஷம் என்னுடைய வங்கி கணக்கிலும், என் வீட்டில் உள்ள தங்க ஆபரணத்திலும் உள்ளது என்பார்கள். சிலர் சொல்லுவார்கள் என் பொக்கிஷம் நான் வாங்கி வைத்த நிலம், விலை உயர்ந்த வாகனம் என்று சொல்லுவார்கள். சிலருக்கு பொக்கிஷம் தாங்கள் பெற்ற பிள்ளைகளாய் இருப்பார்கள். சில அரசியல்வாதிகளுக்கு பதவி தான் பொக்கிஷமாக காணப்படும். தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறது ?
உங்கள் பொக்கிஷத்தை சோதோம் கொமோராவிலே வைக்கவேண்டாம். எகிப்திலே வைக்க வேண்டாம். பாபிலோனிலும் வைக்க வேண்டாம். மாறாக உங்கள் பொக்கிஷம் இயேசுவாக இருக்கட்டும். பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். சிலர் தங்கள் கடைசி நாளில் ஐயோ நான் கட்டின வீட்டை விட்டு சொல்கிறேனே, காரை விட்டு சொல்கிறேனே, பந்தங்களை விட்டு சொல்கிறேனே, எனக்கு பின் யாராவது இதை அபகரித்துக்கொண்டால் என்ன செய்வது என்று அங்கலாய்ப்பார்கள். டி ல் மூடி என்ற பக்தன் தன் வாழ்நாளின் கடைசியில் இப்படியாக சொன்னார் உலகம் எனக்கு முன்பாக சுருங்கி மறைகிறது. பரலோகம் எனக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இது என்னுடைய முடி சூடும் நாள். நித்திய மகிழ்ச்சிக்குச் செல்கிறேன் என்றார். அருகிலிருந்தவர்களை பார்த்து நான் மரித்துப்போகிறேன் என்று நினைக்காதிருங்கள். நான் இனி அதிக ஜீவனுள்ளவனாய் அந்த பரலோக தேசத்தில் வாழ்ந்துகொண்டிருப்பேன் என்று சொன்னார்.
ஒரு வயதான தகப்பனார் தன் கடைசி காலத்தில் தன் செல்ல மகனை அழைத்து, மகனே உனக்கு என் வாழ் நாள் முழுதும் பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருந்தாலும் மேலான ஒரு பொக்கிஷத்தை உனக்கு தருகிறேன். அது உன் வாழ்நாளில் ஏற்ற தாழ்வு வரும்போது உதவி செய்யும்; உன்னை நித்தியத்திற்கு நேராக நடத்தும் என்று சொல்லி பரிசுத்த வேதாகமத்தை கொடுத்தார். இயேசுவை பற்றி அதிகமாக மகனோடு கூட பேசினார். இயேசுவே உன் வாழ் நாட்களில் பொக்கிஷமாக இருக்கட்டும். அவரே உனக்கு எல்லாமுமாய் இருக்கட்டும் என்று கூறினார். அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன் (யோபு 23:12) என்று யோபு சொல்லுகிறதை பார்க்கிறோம். ஆகையால் பூமியில் வாழ்கிற இந்த நாட்கள் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்த்து வைக்க மிகவும் கவனம் செலுத்தாமல் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க கவனமாய் செயல்படுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org