அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள் (ஆதி. 16:13).
ஆகார் ஆண்டவருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டாள். அவள் கடினமாக நடத்தப்பட்ட சூழ்நிலையில், வனாந்தரத்தில் ஓடிக்கொண்டிருந்த தனிமையான நிலையில், கர்த்தருடைய கண்கள் அவளைக் கண்டு, வாக்குத்தத்தங்களைக் கொடுத்து அவளைத் தேற்றினதால், அப்பெயரைக் கர்த்தருக்குக் கொடுத்தாள்.
ஆகார், ஆபிரகாமின் மனைவியாகிய சாராயின் அடிமைப் பெண். கர்த்தர் ஆபிராமுக்கு வாக்குத்தத்தின் குமாரனைக் கொடுப்பேன் என்று கூறியிருந்தும், அந்த வாக்குத்தத்தம் நிறைவேற அனேக வருடங்கள் ஆனது. ஆகையால் அவன் மனைவியாகிய சாராய், தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அவனுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆகார் கர்ப்பந்தரித்தாள், அதினிமித்தம் தன் நாச்சியாராகிய சாராயை அற்பமாக எண்ணினாள். சாராய், ஆபிராமிடத்தில் இந்தப்பழி உம்மேல் சுமரும், கர்த்தர் நம்மிருவர் நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். கர்த்தர் வாக்குத்தத்தத்தை ஆபிராமுக்கு கொடுத்ததினால், அவன் செய்த காரியம் தான் தவறு என்பதை சாராய் அவனுக்கு உணர்த்தினாள். ஆபிராம் சாராயை நோக்கி, இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள், உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். சாராய் அவளைக் கடினமாய் நடத்தினதினால் ஆகார் அவளை விட்டு ஓடிப்போனாள். ஆபிராம் மறந்துவிடலாம், அவனுடைய துருத்தியின் தண்ணீர் கூட தீர்ந்துவிடலாம், ஆனால் கர்த்தருடைய கண்கள் ஆகாரைக் கண்டது, அவளும் கர்த்தரைக் கண்டாள். ஆகையால் என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் என்று நன்றியோடு கூறினாள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் சூழ்நிலைகளை அறிகிற தேவன் ஒருவர் உண்டு. அவர் உங்களின் தாழ்ந்த நிலையை அறிகிறவர். உங்களை மனதார நேசிக்கிறவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகத்தின் முடிவு பரியந்தமும் அவர் உங்கள் மேல் கண்களை வைத்து விசாரிக்கிறவர் என்பதையும், அற்புதங்களைச் செய்து உங்களை விடுவிக்கிறவர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் நன்றாயிருப்பதற்காக உங்களுக்காகக் கல்வாரி சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்தவர். உலகத்தின் ஜனங்கள் உங்களை மறந்துபோகலாம், ஆனால் இயேசு ஒருநாளும் உங்களை மறப்பதில்லை. உங்கள் விசுவாசம் அவர் மேல் உறுதியாக இருக்கட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar