பிர 4:9. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
கணவனும் மனைவியும் இணைந்து கர்த்தருடைய பணியை செய்யும்போது அது மிக பெரிய ஆசீர்வாதமாக காணப்படும். சில குடும்பங்களில் மனைவி மாத்திரம் கர்த்தருடைய பணியில் இருப்பார்கள், கணவன் உலகத்தோடு ஒட்டி வாழும் சூழ்நிலையில் இருப்பார்கள். சில குடும்பங்களில் கணவன் உற்சாகமாக கர்த்தருடைய பணியில், ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவார்கள் ஆனால் மனைவிமார்கள் அதை தடுக்கிறவர்களாக காண்ப்படுவார்கள். இப்படி பிரிந்து செயல்படுவது கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை செய்ய முடியாது.
இரண்டாவதாக, ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே (பிர 4:10) என்று வசனம் சொல்லுகிறது. கிறிஸ்துவ வாழ்க்கையிலும் நமக்கு ஆவிக்குரிய சகோதர சகோதிரிகளின் ஐக்கியம் இன்றியமையாதது. ஒரு சகோதரனோ அல்லது சகோதிரியோ பாவத்தில் விழும்போது மற்றொருவர் அவர்களை பாவத்தின் பிடியிலிருந்து தூக்கிவிட ஏதுவாய் இருக்கும். சிம்சோனுக்கு இப்படிப்பட்ட ஆவிக்குரிய ஐக்கியம் இல்லாத காரணத்தினால், அவன் தனித்து செயல்பட்டதினால், பாவத்தில் விழுந்து கடைசியில் வீழ்ச்சிக்குள்ளானான்.
மூன்றாவதாக, இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? (பிர 4:11) என்று வசனம் சொல்லுகிறது. நமக்குள்ளாக, நம்முடைய இருதயத்தில் எப்பொழுதும் அக்கினி எரிந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி எரிந்தால் தான் நம்முடைய சகோதரர்கள் குளிர்ந்த நிலைக்கு செல்லும்போது நம்முடைய ஐக்கியத்தின் மூலம் அவர்களை அக்கினியாக மாற்ற முடியும். பலிபீடத்தில் எரிகிற அக்கினி அவிழ்ந்துபோகலாகாது என்று வசனம் சொல்லுகிறது. ஒருவர் ஐக்கியம் இல்லாமல் தனியாய் அக்கினியால் நிரப்பப்பட்டிருந்தால், அதனால் பயன் ஒன்றுமில்லை. ஐக்கியம் காணப்படும் என்றால் அந்த அக்கினி மற்றவர்கள் மேல் பற்றி பிடிக்கும்.
நான்காவதாக, ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர 4:12) என்று வசனம் சொல்லுகிறது. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:18) என்று இயேசு சொன்னார். சத்துரு கூட்டமாக தாக்க வரும்போது இரண்டு பேர் ஒருமனப்பட்டால், எல்லா சத்துருவின் கிரியைகளையும் தடை செய்துவிடலாம்.
மாத்திரமல்ல, முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. திருமண வாழ்வில் தேவன், கணவன், மனைவி இம்மூன்று பேரும் இணைந்திருந்தால் மாத்திரமே அது ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும். தேவனை சார்ந்து இல்லாத திருமணம் செழிப்பாகவோ ஆரோக்கியமாகவோ இருக்காது. ஆகையால் கிறிஸ்துவுக்குள் சபை ஐக்கியமாக கூடி இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org