உன் கிரீடம் பூக்கும் (Your Crown Shine).

அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்;  அவன் மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார் (சங்கீதம் 132:18).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/mLI53ncMsLI

தேவன் உங்கள் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவிப்பார்,   ஆனால் உங்கள் தலையை உயர்த்தி,   உங்கள் கிரீடங்களை பூக்கும் படிக்குச்  செய்வார். நூற்றியம்பது சங்கீதங்களில்,   பதினைந்து சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகக் காணப்படுகிறது. அவைகள்  நூற்றியிருபதிலிருந்து,   நூற்றிமுப்பத்தி நான்கு வரைக்கும் எழுதப்பட்டிருக்கிறது.  எருசலேம் பட்டணமும்,   தேவாலயமும் மலையுச்சியில் காணப்பட்டதினால்,   யூதர்கள் மூன்று முக்கியமான பண்டிகைகளில் கர்த்தரை தொழுது கொள்ள வரும் போது,   மலையேறுகையில் பாடுகிற பாடல்களாக இவை அந்நாட்களில் காணப்பட்டது. இவற்றில் நான்கு சங்கீதங்கள் தாவீது ராஜாவால் எழுதப்பட்டது (122,  124,  131,  133),   ஆனால் மேற்குறிப்பிட்ட  நூற்றிமுப்பத்திரண்டாவது சங்கீதம் தாவீது ராஜாவைக் குறித்து எழுதப்பட்டது,   யார் எழுதினார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. 

கர்த்தாவே,   தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும்  நினைத்தருளும் என்ற விண்ணப்பத்தோடு துவங்குகிறது.  தாவீது ராஜா இஸ்ரவேலின் பெரிய ராஜாவாகக் காணப்பட்டிருந்தும்,   பல உபத்திரவங்களின் வழியாகக் கடந்து சென்றார்.  பெற்றோராலும்,   சகோதரர்களாலும் அற்பமாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்,   வனாந்தரமே வாழ்க்கையாகக் காணப்பட்டது,   கறவலாடுகளுக்கு  பின்னால் அலைந்து திரிந்தார்.  சவுல் ராஜாவால் அனேக முறை வேட்டையாடப்பட்டார். யூதா கோத்திரத்தைத் தவிர மற்ற கோத்திரங்கள் ஏழு வருஷம் அவனை ராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன் சொந்த குமாரானால்  துரத்தப்பட்டார். ஆனால் கர்த்தர் அவனுடைய சகல உபத்திரவங்களையும்  நினைத்தருளி அவனை ஆசீர்வதித்து,   அவனுடைய கொம்பை முளைக்கப் பண்ணி,   அவனுக்கு ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணினார். அவனுக்கு விரோதமாக எழும்பின அத்தனை பேருக்கும் வெட்கத்தை உடுத்து வித்து,   அவனுடைய கிரீடத்தை பூக்கும் படிக்குச் செய்தார்.  

கர்த்தருடைய பிள்ளைகளே,   உங்கள் உபத்திரவங்களை நினைத்திருக்கிற தேவன் ஒருவர் உண்டு என்பதை மறந்து போகாதிருங்கள். உங்கள் உபத்திரவங்கள்  தாவீதின்  உபத்திரவங்களிலிருந்து வேறுபட்டதாகக் காணப்படலாம். கர்த்தர்   உபத்திரவப்பட்டவனுடைய  உபத்திரவத்தை அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும்,   தம்முடைய முகத்தை அவனுக்கு  மறைக்காமலுமிருந்து,   தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறவர் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் உபத்திரவத்தின் பாதையில் கடந்த செல்லும் போது எல்லாரும் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்,   அற்பமாகக்  கருதுவார்கள்.  யோபு உபத்திரவங்களின் பாதையில் கடந்து சென்ற போது,   அவனுடைய மனைவியும்,   நண்பர்களும் அவனில் குறைகளைக்  கண்டுபிடிக்க  முயன்று,   அவனை விட்டு விலகினார்கள். ஆனால் கர்த்தர் அவனுடைய  உபத்திரவங்களை நினைத்துப் பார்த்து அவனை விடுவித்தார். அதுபோல உங்களுடைய உபத்திரவங்களை நினைத்துப் பார்த்து உங்களை விடுவிக்கும் வேளை வந்து விட்டது. உங்களை  உபத்திரவப்படுத்தின உங்கள் சத்துருக்களுக்கு வெட்கத்தை  உடுத்துவிப்பார்.   அவைகள் அவர்களுடைய ஆடையாகக் காணப்படுவதினால் மற்றவர்கள் அதைக் கண்டு,   கர்த்தர் உங்களுக்கு நீதி செய்தார் என்று சாட்சி பகிருவார்கள். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்கள் தலையை உயர்த்துவார். யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தை தன் சகோதரரிடத்தில் கூறினபோது,    நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்,   அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது,   உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றும் வேறொரு சொப்பனம் கண்டு,   சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது  என்றும் கூறின போது அவனுடைய சகோதரர்கள் எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று கூறி அவனைப் பகைத்தார்கள்,   தகப்பனாகிய யாக்கோபும் அவனைக் கடிந்து கொண்டான். ஆனால் கர்த்தர் அப்படியே யோசேப்புக்கு செய்து,   அவன் தலையை உயர்த்தி,   அவன் கிரீடத்தை பூக்கும் படிக்குச் செய்தார். அப்படியே உங்கள் மீதில் உங்கள் கிரீடங்கள் பூக்கும் படிக்குச் செய்வார். உங்கள் வெட்கத்திற்குப் பதிலாக இரண்டத்தனையான பலன்களைக் கொடுத்து உங்களை மகிழப்பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *