என் ஆத்தும நேசரைக் கண்டேன்:-

உன். 3:4. நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

ஸ்திரிகளுக்குள் ரூபவதி ஒருநாள் இரவு தன்னுடைய நேசரை தொலைத்துவிட்டாள். எருசலேமில் அநேகர் அழகாய் காணப்பட்டாலும், கருப்பாய் இருந்த சூலமித்தியை ஸ்திரிகளுக்குள் ரூபவதியாக மணவாளன் கண்டார். ஆரங்கள் எல்லாம் பின்பு அவளுக்கு கொடுத்தார். அப்படி இயேசுவின் நேசத்தால் இழுத்துக்கொண்டவள் இப்பொழுது தன் நேசரை தொலைத்துவிட்டாள். இப்படி தான் நாம் முன்பு கருப்பாய், யாரும் விரும்பத்தகாதவாறு, உலையான சேற்றில், யாரும் விலைகொடுத்து வாங்க முடியாதவாறு, பாவத்தில் சிக்கி வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்படி இருந்த நம்மை இயேசு அவருடைய அளவற்ற அன்பினால் நம்மை இழுத்துக்கொண்டு ஆரங்கள் பூட்டி அலங்கரித்தார். அதன் பிறகு, அந்த நேசரை மறந்துவிடுகிறோம்.

தொலைத்துவிட்ட நேசரை தேடி சூலமித்தி நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து தேடினாள். காவலாளர்களிடம் விசாரிக்கிறான். காவலாளர்களோ அவளுக்கு வேண்டிய பாதையை காட்டவில்லை. இப்படிப்பட்ட காவலாளர்களாக நாம் அநேக வேளைகளில் மாறிவிடுகிறோம். இயேசுவை தேடி வருகிற ஜனங்களுக்கு சரியான பாதையை காட்ட தவறிவிடுகிறோம். கடைசியில் அவளே தன் மணவாளனை கண்டுகொண்டாள். தன் ஆத்தும நேசரை கண்டுகொண்டாள்.

நீங்கள் இயேசுவை உங்கள் ஆத்துமாவிற்கு நேசராக கண்டுகொண்டீர்களா? இல்லை வெறும் வெளித்தோற்றத்திற்கு நான் கிறிஸ்தவன், வாரம் தோறும் சபைக்கு செல்பவன், காணிக்கை கொடுப்பவன், குறிப்பிட்ட ஊரில் இருக்கும் பெரிய திருச்சபையில் திருமணம் செய்துகொண்டவன், குறிப்பிட்ட சபையை சேர்ந்தவன், வெறும் வாயின் வார்த்தையால் இயேசுவை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? இயேசுவை உங்கள் ஆத்துமாவிற்கு நேசராக கண்டுகொள்ளுங்கள்.

மற்றொரு முறையும் நடு இராத்திரியில் மணவாளன் கதவை தட்டும்போது, சூலமித்தி தாமதமாக கதவை திறந்தாள். அதற்குமுன் தன் நேசர் கடந்துசென்றுவிட்டார். நாம் எந்நேரமும் நம் ஆத்தும நேசருக்கு செவி சாய்க்கிறவர்களாக காணப்படவேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஆபிரகாமிடம் பேசினபோதெல்லாம் அவன் உடனடியாக செவி சாய்த்தான். சாமுவேலை கர்த்தர் நடு இராத்திரியில் அழைத்தபோது உடனே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று செவி சாய்த்தான். நீங்களும் உங்கள் ஆத்தும நேசர் எப்பொழுது கூப்பிட்டாலும் அவருக்கு செவி சாயுங்கள். ஆத்தும நேசரை விடாமல் கண்டுகொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *