புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள், வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள் (எரேமியா 10:2).
இஸ்ரவேல் குடும்பத்தாருக்குக் கர்த்தர் கொடுத்த ஆலோசனையாக மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. இந்நாட்களில் கர்த்தருடைய வீட்டாராகிய ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கு மிகவும் பொருந்தும். மார்க்கம் என்பது வழி, கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல, அது ஒரே மார்க்கமாக, வழியாகக் காணப்படுகிறது. இயேசுவே அந்ந வழி. ஆண்டவர் கூறினார், நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்று. அவர் ஒருவரே மனுகுலத்தின் இரட்சிப்பின் வழி, அவர் ஒருவரே பரிசுத்தத்தின் வழி, அவர் ஒருவரே நீதியின் வழி, அவர் ஒருவரே மோட்சத்தின் வழி. இயேசு இந்த பூமியில் மனுஷகுமாரனாக வெளிப்பட்டதின் நோக்கங்களில் ஒன்று. நமக்கு ஒரு மாதிரியை விட்டுச் செல்லும்படிக்கு. நாம் அவருடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, அவருடைய பாதச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இயேசு தன்னுடைய மந்தையின் ஆடுகளுக்கு முன்பாக நடந்து போகிறவர், அவருடைய சத்தத்தை அறிந்து அவருடைய மந்தையின் ஜனங்கள் அவர் காட்டும் வழியில் அவருக்குப் பின்செல்வார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு அவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த பிரமாணங்களில் ஒன்று புறஜாதிகளுடைய வழிகளைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்பது (லேவி. 20:23). கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருநாளும் உலகத்தின் வழிகளைக் கற்றுக்கொள்ளாதிருங்கள், புறஜாதிகளின் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். உங்கள் பிள்ளைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் போது உலகத்தின் பிள்ளைகளின் வழிகளைக் கற்றுக் கொள்ளாதிருக்கும் படிக்குக் கவனமாயிருங்கள். மேலை நாடுகளில் கேள்விப்பட்ட போதைப் பழக்கவழக்கங்கள் நம்முடைய தேசங்களிலும் இந்நாட்களில் பெருகி விட்டது. மதுபான பழக்கவழக்கங்களுக்கு வாலிப பிள்ளைகள் அடிமைகளாகக் காணப்படுகிறார்கள். சினிமாக்கள் சீரியல்கள் வலைத்தளங்கள் வாயிலாக மாம்சீக கிரியைகளைக் எளிதாகக் கற்றுக்கொண்டு அதில் சிக்கித் தவிக்கிறார்கள். டாட்டூ குத்துவது, சரீரங்களைக் கீறிக்கொள்ளுவது, அநாகரிகமான ஆடைகள், திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழ்தல் போன்ற வேதத்திற்குப் புறம்பான காரியங்களை ஒருபோதும் கற்றுக் கொள்ள அனுமதிக்காதிருங்கள். கண்கள் சரீரத்தின் விளக்கு என்று வேதம் கூறுகிறது. உங்கள் கண்கள் சுத்தமாயிருந்தால் சரீரம் முழுவதும் சுத்தமாகக் காணப்படும். கண்களை அலைய விட்ட சிம்சோன் கடைசியில் கண்பிடுங்கப் பட்டவனாக வேடிக்கை காட்டும் நபராக மாறிவிட்டான். பெரியவர்கள் கூட விவாக மஞ்சத்தை அசுசிப் படுத்துவது, போதைப் பழக்கவழக்கங்களில் புருஷன் மனைவியாகச் சேர்ந்து அடிமைகளாய் காணப்படுகிறவர்களும் உண்டு. புறஜாதிகளின் பழக்கவழக்கங்களைக் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் கற்றுக் கொள்ளக் கூடாது.
கர்த்தர் உங்களுக்கு முன்பாக ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறார் அவருடைய வழிளைக் கற்று அதில் நடந்தால் அது உங்களை ஜீவனுக்கு ஏதுவாக நடத்தி, நித்தியத்தில் கொண்டு சேர்க்கும். இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பான புறஜாதிகளின் வழிகளைக் கற்றுக்கொண்டு அதில் நடந்தால், அது மரணவழியாய் காணப்படுவதினால் உங்களை அக்கினிக் கடலில் கொண்டு சேர்க்கும். ஆகையால் கர்த்தருடைய வழிகளைக் கற்றுக்கொண்டு அதில் நடக்க உங்களை அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar