துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன், நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும் (சங்கீதம் 75:10).
கர்த்தர் நம்மை ஒரு புதிய மாதத்திற்குள் கிருபையாய் நடத்திக் கொண்டு வந்தார். போன மாதத்தில் காணப்பட்ட அனேகர் இந்த நாளில் இல்லை. ஆனாலும் கர்த்தர் நம்மைப் பாதுகாத்து நடத்திக் கொண்டு வருகிறார். கொள்ளை நோய்களும், யுத்தங்களும், பஞ்சங்களும் தேசங்களில் காணப்படும் போது நமக்கு ஒரு குறைவுமில்லாமல் நடத்துகிற தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிக்க கடமைப் பட்டவர்களாய் காணப்படுகிறோம். கர்த்தருக்குப் பயந்து, அவரை உண்மையாய் தொழுது கொண்டு, அவருடைய ரத்தத்தால் கழுவப்பட்டு, நீதிக்குரிய ஜீவியம் செய்கிற உங்கள் கொம்புகள் உயர்த்தப்படும் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். உங்கள் தலைகள் உங்கள் சத்துருக்கள் நடுவில் உயர்ந்திருக்கும். அதேவேளையில் துன்மார்க்கமாய் ஜீவித்து, வீம்புக்காரராய் காணப்பட்டு, மேட்டிமையோடு காணப்படுகிறவர்களுடைய கொம்புகள் வெட்டப்படும் என்றும் மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.
அன்னாளுடைய ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் அவளுக்கு ஒரு குமாரனைக் கொடுத்த வேளையில் அவள் கர்த்தரை நோக்கி, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது(1 சாமு. 2:1) என்று நன்றியோடு துதித்தாள். அதுபோல உங்கள் எல்லா ஜெபங்களுக்கும் கர்த்தர் பதில் தந்து, உங்கள் நிந்தைகள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு, இந்த புதிய மாதத்தில் உங்களை மகிழப்பண்ணுவார். என் ஜெபங்களுக்குப் பதில் வரவில்லையே என்று நெடுநாட்களாய் நீங்கள் காத்திருக்கக் கூடும், ஒருவேளை சோர்ந்து போய், பின் மாற்றத்தில் கூடக் காணப்படலாம். ஜெபத்தைக் கேட்கிற நம்முடைய தேவன், இந்த புதிய மாதத்தில் உங்கள் ஜெபங்களுக்குப் பதில் தருவார். உங்கள் துக்க நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்து, நன்மையானதைக் கர்த்தர் உங்களுக்கு அருளிச் செய்வார்.
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தர் என் ரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர், என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் (2 சாமு. 22:3) என்று பாடிக் கர்த்தரை மகிமைப்படுத்தினார். அதுபோல இந்த புதிய மாத்தில் கர்த்தர் உங்களை எல்லா வல்லடிகளுக்கும், வன்முறைகளுக்கும், ஆபத்துகளுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். அவருடைய சமூகம் உங்களுக்கு முன்பாக எப்பொழுதும் செல்லும். உங்கள் போக்கிலும் வரத்திலும் கர்த்தர் உங்களோடு காணப்படுவார். யாரை விழுங்கலாம் என்று சிங்கத்தைப் போல வகை தேடிச் சுற்றித்திரிகிற பொல்லாத சத்துருவின் மறைவான கண்ணிகளுக்கு விலக்கிக் காப்பார்.
கர்த்தருடைய தயவினால் நம்முடைய கொம்பு உயரும் என்று சங். 89:17ல் எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய தயையை இந்த புதிய மாதத்தில் உங்களுக்கும் கட்டளையிடுவார், அந்த தேவ தயவு உங்களை உயர்த்தும். நீங்கள் போகிற இடங்களில் எல்லாம் அனுகூலமான வாசல் உங்களுக்குத் திறக்கும். எதிர்பாராத நபர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், எதிர்பாராத இடங்களிலிருந்து உங்களுக்கு ஒத்தாசை கடந்து வரும். முட்செடியில் எழுந்தருளின தேவ தயவு, யோசேப்பின் உச்சந்தலையில் இறங்கினதினால், அவனுடைய கொம்பு உயர்த்தப்பட்டது, அவன் கடந்து சென்ற இடங்களில் எல்லாம் அவனுடைய காரியம் வாய்த்தது, ஆகையால் கர்த்தரால் உயர்த்தப்பட்டு பார்வோனுடைய அடுத்த இடத்தில் உயர்ந்தான்.
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி, நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன் என்று மீகா4:13ல் கர்த்தர் வாக்களித்திருக்கிறார். உங்கள் கொம்புகளைக் கர்த்தர் இரும்பாக்கும் போது, உங்கள் சத்துருக்களை எளிதாக மேற்கொள்ளுவீர்கள். ஒருவழியாய் உங்களுக்கு எதிராக வருவார்கள், ஆனால் ஏழு வழியாக ஓடிப் போகும் படிக்குச் செய்வார். உங்கள் கரங்கள் உங்கள் சத்துருக்களின் பிடரியின் மேல் காணப்படும். உங்களைக் குறித்த பயத்தையும் நடுக்கத்தையும் உங்கள் சத்துருக்களுக்குக் கர்த்தர் கட்டளையிடுவார். உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
நீதிக்குரிய ஜீவியம் செய்ய உங்களை முழுவதுமாக அர்ப்பணியுங்கள். உங்கள் கொம்புகளைக் கர்த்தர் உயர்த்தி உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar