கர்த்தரே உங்கள் பயமும், உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

ஏசா 8:12. இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

கர்த்தர் தம்முடைய ஜனங்களை பார்த்து சொல்லுகிற வார்த்தையாக இந்த வசனம் காணப்படுகிறது. இந்நாட்களில் அநேக ஜனங்கள் கர்த்தருடைய பிள்ளைகளை கட்டுப்பாடு பண்ணுகிறவர்களாக, சபைக்கு விரோதமாக செயல்படுகிறவர்களாக காணப்படுவதை பார்க்க முடிகிறது. இந்நாட்களில் மாத்திரமல்ல கிறிஸ்துவ சரித்திரத்தில் இப்படிப்பட்டதான கட்டுப்பாடுகளை விதிக்கிற ஜனங்கள் அநேகர் எழும்பினார்கள். உங்களுக்கு எதிராக, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றவேண்டும் என்று ஓடுகிற உங்களுக்கு எதிராக ஜனங்கள் கட்டுப்பாடு பண்ணினாலும், அவர்களுக்கு பயப்படாமல் கலங்காமல் சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து, கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள் (1 பேதுரு 3:14-15) என்று கர்த்தர் சொல்லுகிறார். மறுவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கர்த்தருக்கு மாத்திரம் பயந்து வாழ்கிற நீங்கள் வேறு எவருக்கும் அஞ்சவோ பயப்படவோ தேவையில்லை.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது சொன்னார் ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10:28). சபையில் ஆராதிக்க கூடாது, சபையில் ஒலிபெருக்கிகளை எழுப்பக்கூடாது, சபையில் நீண்ட நேரம் ஆராதிக்க கூடாது, சபை அதிகாலையில் நடத்தக்கூடாது, சபையில் அந்நியபாஷை பேசக்கூடாது, சபை கட்டக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுபண்ணின ஜனங்கள் இப்பொழுது வீட்டில் சேர்ந்து ஜெபிக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவிற்கு ஜனங்கள் வந்துவிட்டார்கள். இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் பயப்படாமல் கலங்காமல் இருங்கள் என்பதாக. யெகோவா தேவன் உங்களோடு இருக்கும்போது, சேனைகளின் கர்த்தர் உங்கள் பட்சம் இருக்கும்போது சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *