ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் (மத். 10:29-31).
ஆண்டவர் தன்னுடைய சீஷர்களைப் பார்த்துக் கூறின வார்த்தைகளாய் மேற்குறிப்பிட்ட வசனங்கள் காணப்படுகிறது. அறுவடைப் பணிக்காக அவர்களை அனுப்பும் போது நீங்கள் விஷேசித்தவர்கள் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் கல்வியறிவில் தேறினவர்கள் அல்ல, ஐசுவரிய வான்களும் அல்ல, சாதாரண மீனவர்கள், அவர்களுடைய பார்வையிலும் அற்பமாகக் காணப்பட்டவர்கள். இந்நாட்களில் காணப்படுகிற கர்த்தருடைய சீஷர்களாகிய நீங்கள் விஷேசித்தவர்கள். உலகம் பெரும் பணக்காரர்களையும், அதிக கல்வி கற்றவர்களையும், அதிகாரம் படைத்தவர்களையும், அதிகமாய் சாதித்தவர்களையும் விஷேசித்தவர்களாக பார்க்கிறது. ஆனால் நம்முடைய தேவன் அவரை உண்மையாய் பின்பற்றுகிறவர்களையும், அவருடன் நெருங்கி ஜீவிப்பவர்களையும், கர்த்தருடைய வார்த்தைக்கு நடுங்குகிறவர்களையும், அவருடைய பிரசன்னத்தில் வாழ்கிறவர்களையும் விஷேசித்தவர்களாய் பார்க்கிறார்.
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளையும், இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளையும் (லூக்கா 12:6) விற்கிறார்கள். அவைகள் மிகவும் விலை குறைந்தவை. அற்பமான அவைகளைக் குறித்துக் கூட கரிசனை உள்ளவர் நம்முடைய தேவன், அவைகள் அவருடைய சித்தமில்லாமல் ஒன்றும் தரையில் விழுவதில்லை, அவைகளை தன் சித்தத்தின் மையத்தில் வைத்திருக்கிறார். அதுபோல நம்முடைய தலையில் உள்ள மயிரையெல்லாம் எண்ணி வைத்திருக்கிறார், சுமார் ஒரு லட்சம் தலைமயிர்கள் காணப்படுவதுண்டு, அவைகள் கூட ஆண்டவர் அறியாதபடிக்கு தரையில் விழுவதில்லை. நாம் கூட அவைகளைக் குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் ஆண்டவர் அவைகள் மேலும் கரிசனை வைத்து, மதிப்பு மிக்கதாகவும், விஷேசித்தவையாகவும் கருதுகிறார்.
இப்படிப்பட்ட முக்கியமற்றவற்றைக் கூட விஷேசித்தவைகளாக கருதும் தேவன், அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப் பட்ட, அவருடைய சுவாசத்தைச் சுமக்கிற, அவருடைய பிள்ளைகளாகக் காணப்படுகிற உங்கள் மேல் எவ்வளவு கரிசனை உடையவராகக் காணப்படுவார்! நீங்கள் பிரமிக்கப்படத்தக்க அதிசயமாக உருவாக்கப்பட்டவர்கள். கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட உங்களுக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை. உங்களுக்குள்ளே இயேசுவின் ஜெயகெம்பீரம் காணப்படுகிறது. உங்கள் வாசஸ்தலங்களை அழகுள்ளவையாகக் கர்த்தர் பார்க்கிறார். ஆகையால் எந்ந சூழ்நிலைகளிலும் பயப்படாதிருங்கள். எதிர்காலத்தைக் குறித்தும் பயப்படாதிருங்கள், காலங்கள் கர்த்தருடைய கரத்தில் காணப்படுகிறது. ஏற்ற வேளையில் உங்கள் வாழ்க்கையில் நேர்த்தியான காரியங்களை செய்து உங்களை மகிழப்பண்ணுவார். என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்றும் வீணாகக் கவலைப்படாதிருங்கள். அவைகள் உங்களுக்கு வேண்டியவை என்பதைக் கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிற தேவனாய் காணப்படுவதினால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ஆகாயத்துப் பறவைகளையும், அடைக்கலான் குருவிகளையும் பிழைப்பூட்டுகிறவர், காட்டுப்புஷ்பங்களைக் கூட உடுத்துவிக்கிற தேவன், உங்களைப் பிழைக்க வைப்பது நிச்சயம். ஆகையால் சோர்வுகளை உதறித் தள்ளிவிட்டு உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

