ஏசா 22:23. அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
ஏசா 22:15-19 வரை வாசிக்கும்போது செப்னா என்னும் சுயநலமுள்ள, துன்மார்க்கமுள்ளவனை குறித்து எழுதப்பட்டிருக்காது. உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய் என்று அவனைக்குறித்து கர்த்தர் சொல்லுகிறார். இப்படித்தான் துன்மார்க்கமாய் ஜீவிக்கிறவர்களுடைய முடிவு பிடுங்கிப்போடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஏசா 22:20-25 வரை எலியாக்கீம் என்னும் ஊழியக்காரனை குறித்து வாசிக்கலாம். அவனைக்குறித்து கர்த்தர் சொல்லும்போது தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன் என்று கர்த்தர் வாக்கு கொடுக்கிறதை பார்க்கலாம். கர்த்தருடைய ஊழியத்தை மன நிறைவோடு செய்யும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் உங்களை கர்த்தர் உறுதியான இடத்தில வைப்பார்.
ஒரு கடிகாரத்தை சுவரில் தொங்க வைக்கவேண்டுமென்றால், அதை தாங்கும் அளவிற்கு ஒரு ஆணியை அடிப்பார்கள். அந்த ஆணி கடிகாரத்தின் எடையை தாங்கமுடியாமல் இருந்தால் கடிகாரம் கீழே விழுந்து நொறுங்கி விடும். கர்த்தருடைய பிள்ளைகள் கீழே விழுந்து நொறுங்கிவிடாமல் இருக்க, கர்த்தர் சொல்லுகிறார் என் ஊழியக்காரர்களை நான் உறுதியான இடத்தில ஆணியாக கடாவுவேன்.
உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் ஊழியத்தை நிறைவாய் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். உலகத்தில் எங்கே இருந்தாலும், எங்கே வேலை செய்தாலும், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை கருத்தாய் பிரசங்கம் செய்யுங்கள். சபையில் வேண்டிய உதவியை செய்து ஊழியக்காரருக்கு தோள்கொடுங்கள். அப்படியாக இருக்கும் நீங்கள் நிலையான இடத்தில இருப்பீர்கள். காற்று அடித்தாலும், புயல் வந்தாலும் நீங்கள் அசைக்க படுவதில்லை. உங்களை சுற்றிலும் பதினாயிரம் பேர் விழுந்தாலும் அது உங்களை அணுகாது. என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 32:18).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org