நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது, முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? (1 பேதுரு 4:17).
கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு, அவருடைய வீடாகிய சபையின் ஜனங்களிடத்தில் முந்தி துவங்கும். ஏனெனில், எவனிடத்தில் கர்த்தர் அதிகம் கொடுக்கிறாரோ அவனிடத்தில் அதிகம் கேட்கிறவர், எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறாரோ அவனிடத்தில் அதிகக் கணக்கைக் கேட்கிறவர். சபை கர்த்தருடைய ஆதீனத்தில் விஷேசித்தது, அவருடைய இரத்தத்தைக் கிரயமாய் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டது. சபை என்பது வெறும் கட்டிடமல்ல, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவயமாகக் காணப்படுகிற ஜனங்களைக் குறிக்கிறது. ஆதாமிற்கு மணவாட்டியை உருவாக்கும் படிக்கு அயர்ந்த நித்திரையைக் கொடுத்து, அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினது போல, கல்வாரி சிலுவையில் இயேசு தன் ஜீவனைக் கொடுத்து, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் அவருடைய விலா பிளக்கப்பட்டு, கடைசி சொட்டு இரத்தத்தையும் ஊற்றிக் கொடுத்து கிரயத்திற்குக் கொண்டது கிறிஸ்துவின் மணவாட்டி சபை.
ஜீவனுள்ள தேவனுடைய சபையின், தூணும் ஆதாரமும், அவருடைய சத்திய வசனமாகக் காணப்படுகிறது. ஆலயத்திற்கு நாம் கடந்து செல்லுவதின் முக்கியமான காரணம், அவருடைய வார்த்தையைக் கற்றுக் கொள்ள. கடைநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து, கர்த்தருடைய சபையிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசாயா 2:2,3). வெளிப்படுத்தல் விஷேசத்தின் இரண்டு, மூன்று அதிகாரங்களில் காணப்படுகிற ஏழு சபைகளுக்குக் கர்த்தர் செய்தியை அனுப்பும் போது, சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில் என்று ஆரம்பிப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்க வேண்டும், வேதத்தை அவன் வாயில் தேடுவார்களே, அவன் சேனைகளுடைய கர்த்தருடைய தூதன் என்றும் வேதம் கூறுகிறது. ஆக சபையின் தூதர்களாகக் காணப்படுகிற ஊழியர்களுடைய பிரதானக் கடமை, மந்தைக்கு வேத வசனங்களைக் கற்றுக் கொடுப்பதாகும்.
இந்நாட்களில் ஜனங்கள் வேத வசனங்களை அறிந்திருந்தும், அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தைப் பார்க்கமுடியவில்லை. சபைகளிலிருந்தும், பல ஊடகங்கள் வாயிலாகவும், கர்த்தருடைய வார்த்தைகள் திரளாய் கிடைக்கிறது, ஆனால் கனிகளைப் பார்க்கமுடியவில்லை. கர்த்தருடைய வார்த்தை கிரியை செய்யக் கூடாத நிலங்களாக அவர்களுடைய இருதயங்கள் காணப்படுகிறது. உலக ஜனங்களுக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் வித்தியாசமில்லாமல் ஜீவிக்கிறார்கள். எசேக்கியேலின் நாட்களில் ஆலயத்தில் காணப்பட்ட சகல அருவருப்புகளும், தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகளும், சூரியனை நமஸ்கரிக்கிற புருஷர்களைப் போல, ஆலயங்கள் அருவருப்புகளின் இடமாக மாறிற்று. புறமதத்தினவருடைய திருமணங்கள் ஆலயத்தில் நடக்கிறது, பாகால்களை ஆலயத்திற்குள் கொண்டுவருகிறார்கள், ஓரினச் சேர்க்கையைச் சேர்ந்தவர்களுடைய திருமணம் ஆலயத்தில் நடக்கிறது, திரைத்துறை கலாச்சாரங்கள் சபைக்குள் வந்துவிட்டது, மாம்சீகக் கிரியைகள் ஆலயத்தில் நடக்கிறது, சபையில் அரசியல் செய்கிறவர்கள் பெருகிவிட்டார்கள், சபைகள் வியாபார ஸ்தலமாகவும், கள்ளர் குகையாகவும் மாறிவிட்டது, ஊழியர்களுக்கு ஊழியம் என்பது வேலையாய் போய்விட்டது, ஆடம்பர பிறந்த நாட்களும், ஆண்டு விழாக்களும் பெருகிவிட்டது. ஊழியர்களிடத்தில் உண்மையில்லை, உக்கிராணத்துவம் இல்லை, கீழ்ப்படிதலுமில்லை. ஆலய வாஞ்சை ஜனங்களிடத்தில் இல்லை. இவைகள் எல்லாம் பாரம்பரிய சபைகளிலும், ஆவிக்குரிய சபைகளிலும் சமமாகக் காணப்படுகிறது. பூமிக்கு உப்பாகக் காணப்பட வேண்டியவர்கள், சாரத்தை இழந்ததின் நிமித்தம் உலகத்தார்களுடைய பாதங்களின் கீழ் மிதிக்கப்படுவதற்கு ஏதுவாகக் காணப்படுகிறார்கள். பூமியில் தேவனுடைய ராஜ்யமாகக் காணப்படுகிற சபை, புறஜாதிகளின் நிந்தைக்குரிய இடமாக மாறிப்போனது.
ஆகையால், கர்த்தருடைய நியாயத் தீர்ப்பு, கர்த்தருடைய வீட்டில் கர்த்தருடைய ஜனங்களிடத்திலிருந்து முந்தி துவங்கும். நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும், பாவியும், தேவனுடைய வசனத்திற்கு கீழ்ப்படியாதவனும் எங்கே நிற்பான். கர்த்தருடைய பிள்ளைகளே, கத்தருடைய வசனத்திற்கு நடுநடுங்கி, தேவனுக்குப் பயந்து ஜீவியுங்கள், அப்போது நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டவர்களாய் அல்ல, தேவனுடைய இராஜ்யத்தின் பாத்திரவான்களாகக் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar