இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகக் கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார், எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2 தீமத். 4:8).
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஐந்து வகையான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். இவைகள் கர்த்தர் அவருடையவர்களுக்கு வைத்திருக்கிற விருதுகளாகக் காணப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்குக் கோப்பைகளைக் கொடுத்து இந்நாட்களில் கனப்படுத்துவது போல, ஆண்டவர் நமக்கு முன்பு வைத்திருக்கிற விசுவாச ஒட்டத்தை ஜெயத்தோடு முடிக்கும் போது, கிரீடங்களைத் தந்து நம்மைக் கனப்படுத்துவார்.
நீதியின் கிரீடத்தை நீதிக்குரிய ஜீவியத்தைப் பூமியில் செய்து, சாட்சியோடு மரிப்பவர்களுக்காகக் கர்த்தர் வைத்திருக்கிறார். நீதியை இரண்டு விதங்களில் குறிப்பிடலாம். முதலாவது நம்முடைய நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தையும் குப்பையுமமாக் காணப்படுகிறது. ஆனால், இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய இரத்தத்தால் பாவங்களற நாம் கழுவப்படும் போது, கர்த்தர் நம்மை நீதிமான்களாக மாற்றுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே என்று ரோமர் 5:9ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நாட்களில் பாவ மன்னிப்பிற்காகவும், குற்ற மனசாட்சியிலிருந்து விடுபடுவதற்கும் பலவிதமான விரதங்களையும், தான தர்மங்களையும், புண்ணிய யாத்திரைகளையும் செய்கிறார்கள். ஆனாலும் பாவத்தின் பாரங்களிலிருந்து விடுதலையை அடைய முடியவில்லை. இயேசுவின் ரத்தத்தினாலன்றி, பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு வேறு வழியே இல்லை. ரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் கூறுகிறது. ஆகையால் சிலுவையண்டையில் வந்து விடுங்கள். இயேசுவே உம்முடைய ரத்தத்தினால் பாவங்களற என்னைக் கழுவும் என்று ஏறெடுக்கிற ஒரு சிறிய ஜெபம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். பாவமன்னிப்பின் நிச்சயத்தைத் தந்து நீதிமான்களாக உங்களை மாற்றும்.
இரண்டாவது, கர்த்தருடைய ஜனங்கள் நீதிக்குரிய ஜீவியத்தைச் செய்யவேண்டும். துன்மார்க்கனாகிய ஏரோது, யோவான் ஸ்நானகனைக் குறித்து நீதியும், பரிசுத்தமுள்ளவனென்றும் அறிந்திருந்தான். இயேசு மனுஷகுமாரனாய் இந்த பூமியில் காணப்பட்ட வேளையில், பிலாத்துவின் மனைவி அவரைக் குறித்து நீதிமான் என்று சாட்சி கொடுத்தாள். நோவா தன் காலத்திலிருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் (ஆதி. 6:9). நாம் குறையுள்ளவர்களும், குற்றங்கள் செய்கிறவர்களாகக் காணப்பட்டாலும், அவைகளிலிருந்து விலகி நீதிக்குரிய ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அநீதி எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் நீதிக்குப் புறம்பான எந்தக் காரியங்களிலும் கர்த்தருடைய ஜனங்கள் ஈடுபடக் கூடாது. இந்நாட்களில் ஆட்டுக்குட்டியானவரின் ரத்தத்தினால் கழுவப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டவர்கள் கூட, அனுதின ஜீவியத்தில் நீதிக்குரிய ஜீவியம் செய்வதில்லை. சாட்சியை இழந்து, சாரமற்றுப் போன உப்பைப் போலக் காணப்படுகிறார்கள். ஏமாற்றுவதிலும், பொய் சொல்லுவதிலும், மற்றவர்களை வஞ்சிப்பதிலும், கோள் சொல்லுவதிலும், கசப்பான விதைகளை விதைப்பதிலும், மாம்சீகக் கிரியைகளில் விழுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். எல்லா துர்கிரியைகளிலும் பங்குள்ளவர்களாகவும், உண்மையும், உத்தமும் உள்ளவர்களைப் பகைக்கிறவர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய காரியங்களில் கூட உத்தமத்தையும், உக்கிராணத்துவத்தையும் விட்டு விலகிக் காணப்படுகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து, விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும் போது, அவருடைய வருகையில் நீதியின் கிரீடத்தை உங்களுக்கும் தந்து உங்களைக் கனப்படுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar