பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள், ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்க தாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1 கொரி. 9:24,25).
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஐந்து வகையான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அவைகளில் ஒன்று அழிவில்லாத கிரீடமாகும். இது ஜெயங்கொள்ளுகிறவர்களுக்காக கர்த்தர் வைத்திருக்கிற கிரீடம். நமக்குமுன்பாக கர்த்தர் வைத்திருக்கிற ஆவிக்குரிய ஓட்டத்தை ஜெயத்தோடு ஓடிமுடிக்கும் போது கர்த்தர் அதை உங்களுக்குத் தந்தருளுவார். வெளிப்படுத்தல் விஷேசத்தில் ஏழு சபைகளுக்குக் கர்த்தர் செய்திகளை அனுப்பும் போது, ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன் என்றும், இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றும், மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றும், ஜாதிகள்மேல் அதிகாரத்தையும் விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன் என்றும், வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும் என்றும், தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன் என்றும், என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும் படிக்கு அருள்செய்வேன் என்றும் வாக்களித்திருக்கிறார். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் பெற்றுக் கொள்ளத்தக்க தாக ஓடுங்கள்.
பூமியில் ஒட்டப்பந்தய போட்டிகளில் ஓடுகிறவர்கள் அனேகராய் காணப்பட்டாலும், எல்லாரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓடினாலும், ஒருவனே பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளுவான். அவர்கள் எல்லாவற்றிலும் இச்சையடக்கம் உள்ளவர்களாய், தங்களைப் பலவிதங்களில் தகுதிப்படுத்தி, அனேகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஓடுவார்கள். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடும், சமுதாயக் கூடுகைகளிலும் நண்பர்களோடும் அதிக நேரத்தைச் செலவுசெய்ய முடியாமலும் காணப்படுவார்கள். இப்படி அனேக காரியங்களை இழந்து தங்களைத் தகுதிப் படுத்தி ஓடினாலும், அவர்களில் ஒருவனே கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவான். அப்படிப் பெற்றுக்கொள்ளுகிற கிரீடத்தைக் கூட வேதம் அழிவுள்ள கிரீடம் என்று அழைக்கிறது. பூமியில் காணப்படுகிற அத்தனை காரியங்களும் அழிவிற்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது. நாம் மேன்மையாய் எதை கருதுகிறோமோ அவைகள் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் தான் ஆண்டவர், பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள், பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை, உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயம் இருக்கும் என்றார்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்காகக் கர்த்தர் வைத்திருக்கிற கிரீடம் அழிவில்லாதது, நித்தியமானது, ஆகையால் அதைப் பெற்றுக் கொள்ளத்தக்க தாக நாம் ஓடவேண்டும். நம்மைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக ஆசையாய் இலக்கை நோக்கித் தொடருங்கள். மேகம் போன்ற திரளான சாட்சிகள் நமக்கு முன்பாக ஜெயத்தோடு ஒடிமுடித்து வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். ஆகையால் பாரமாய் தோன்றுகிற எல்லாக் காரியங்களையும் உங்களை விட்டு ஒதுக்கி, நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, இயேசுவாகிய இலக்கை நோக்கி பொறுமையோடு உங்கள் ஒவ்வொருவருக்கும் என்று நியமித்திருக்கிற ஓட்டத்தில் அனுதினமும் ஓடுங்கள். பாதை மாறி ஓடாதிருங்கள். சத்துரு உங்களை வழிவிலகும்படிச் செய்ய அனேக தடைகளையும், கண்ணிகளையும், வஞ்சகங்களையும், இடறுதல்களையும் உங்களுக்கு முன்பாகக் கொண்டுவருவான். அவனுடைய தந்திரங்களை முன்னறிந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். இடது புறம் வலது புறம் சாயாமல் வழியிதுவே இதிலே நடவுங்கள் என்று கூறுகிற ஆவியானவருடைய சத்தத்தைக் கேட்டு ஓடுங்கள். என் ஆடுகள் என் சத்தத்தை அறியும், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது என்று கூறிய நல்ல மேய்ப்பனுடைய பாதச்சுவடுகளைப் பின்பற்றி ஓடுங்கள். அப்போது அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய கிரீடத்தைக் கர்த்தர் வெளிப்படும் போது உங்களுக்குத் தந்து உங்களைக் கனப்படுத்துவார். அந்ந நாள் இன்ப நாளாகவும், பாக்கிய நாளாகவும் காணப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar