நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான், பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் (வெளி. 2:10).
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஐந்து வகையான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அவைகளில் ஒன்று ஜீவ கிரீடமாகும். ஆண்டவருக்காக உபத்திரவங்களையும், பாடுகளையும், சிறையிருப்புகளையும் அனுபவித்து, தங்கள் ஜீவனையும் கோதுமை மணியாய் விதைத்து, இரத்த சாட்சிகளாக மரிக்கிறவர்களுக்காகக் கர்த்தர் வைத்திருக்கிற வெகுமதியாய் ஜீவகிரீடம் காணப்படுகிறது. வெளிப்படுத்தல் விசேஷசத்தில் ஏழு சபைகளுக்குக் கர்த்தர் செய்தியை அனுப்பின வேளையில், இரண்டு சபைகளைக் குறித்து அவர் குறை ஒன்றும் சொல்லவில்லை. அதில் ஒன்று சிமிர்னா சபையாகும். இந்த சபையின் விசுவாசிகள் ஆண்டவருக்காகப் பாடுகளையும், கஷ்டங்களையும், காவலையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆகையால் கர்த்தர் அவர்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன் என்று வாக்களித்தார்.
இயேசு இந்த பூமியில் ஊழியம் செய்த மூன்றரை வருடங்களும் அனேக பாடுகளையும், கஷ்டங்களையும் அனுபவித்தார். யூதர்கள் அவரை கொலை செய்யும்படிக்கு முயன்றார்கள். ஏரோது அவரைக் கொலை செய்ய மனதாயிருந்தான் (லூக்கா 13:31). ஊழியத்தின் கடைசி நாட்களில், மனுகுலத்தின் இரட்சிப்பிற்காக, கல்வாரிச் சிலுவையில், அனேக பாடுகளையும் வேதனைகளையும் சகித்து, தன் ஜீவனைக் கோதுமை மணியாய் விதைத்தார். அவரை பின்பற்ற விரும்புகிறவர்களும் அவரைப் போல, தங்கள் தங்கள் சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தின் நாட்களிலும், இயேசுவின் நாமத்தினிமித்தம் அனேக உபத்திரவங்களையும், பாடுகளையும் அனுபவித்தார்கள். அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று அவர்களும் நமக்கு கற்றும் கொடுத்தார்கள் (அப். 14:22), அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தால் அவரோடே கூட ஆளுகையும் செய்யமுடியும் நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார் (2 தீமோ. 2:12), சிலுவையில்லை என்றால் சிங்காசனம் இல்லை என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும். திரளான மிஷனரிகள் இயேசுவின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி தங்கள் மேலை நாடுகளின் வசதியான வாழ்க்கையை விட்டு, ஜீவனையும் பாராமல் கீழ் தேசங்களில் வந்து ஊழியம் செய்து கோதுமை மணியாய் தங்கள் ஜீவனை விதைத்தார்கள். மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாய், தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டு கர்த்தருடைய பணியைத் தியாகத்தோடு செய்தார்கள். அவர்களுடைய ஊழியத்தின் பலன்களாக நாம் காணப்படுகிறோம்.
கிறிஸ்தவ ஜீவியம் என்பது ஒரு சுகபோகமான வாழ்வாக இந்நாட்களில் மாறிவிட்டது. அவ்வாறு போதிக்கிறவர்கள் திரளாய் எழும்பினதினாலே, ஆண்டவருக்காகப் பாடுகளையும் கஷ்டங்களையும் ஏற்றுக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. ஆண்டவரை அறியாதவர்கள் ஆடம்பரமாக ஜீவிப்பதைப் போலவே கர்த்தருடைய ஜனங்களும் ஊழியர்களும் காணப்படுகிறார்கள், இயேசுவையும், அவருடைய சிலுவையின் பாதையையும் மறந்து போனார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்காக உபத்திரவங்களையும், சோதனைகளையும் சகிக்கிறீர்களா? சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் உத்தமனென்று விளங்கியபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக்கோபு 1:12) என்று வாக்களித்தவர், அவரிடத்தில் அன்பு கூருகிற உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தந்து உங்களை மகிழப்பண்ணுவார். ஆகையால் உற்சாக மனதோடு கர்த்தரைப் பின்பற்றுங்கள், உண்மையாய் அவரை சேவியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar