மகிமையுள்ள கிரீடம்.

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல,   மனப்பூர்வமாயும்,   அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல,   உற்சாக மனதோடும்,   சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல,   மந்தைக்கு மாதிரிகளாகவும்,   கண்காணிப்புச் செய்யுங்கள், அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள் (1 பேதுரு 5:2-4).

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஐந்து வகையான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அவைகளில் ஒன்று மகிமையுள்ள வாடாத கிரீடமாகும். இது மேய்ப்பர்களுக்காகவும்,   கர்த்தருடைய வார்த்தையை கற்றுக் கொடுக்கிறவர்களுக்காகவும்,   பிரதான மேய்ப்பனாகிய இயேசு வைத்திருக்கிற வெகுமதியாகும்.  

ஆவிக்குரிய மேய்ப்பர்களுக்கு இரண்டு பிரதான பணிகளைக் கர்த்தர் வைத்திருக்கிறார்,   ஒன்று உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்க்க வேண்டும். மந்தை தேவனுடையது,   அவருடைய கிருபையின்படி  அதைப் பகிர்ந்தளிக்கிறார். அவரவர்களுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிற மந்தைக்கு வசனத்தைக் கற்றுக்கொடுத்து அவருடைய பாதையில் நடத்தவேண்டும். ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்,   வேதத்தை அவன் வாயில் தேடுவார்கள் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய ஆலயத்திற்கு ஜனங்கள் வருவது,   அவருடைய வழிகளை வேதத்தின் மூலம் கற்றுக்கொள்ளுவதற்கு என்ற உணர்வோடு மந்தையை நடத்தவேண்டும். இரண்டாவது மந்தையைக் கவனித்து,   அவர்களுக்கு முன்பு மாதிரியின் ஜீவியம் செய்து, பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டும்.  நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்,    மேய்ப்பனாயிராதவனும்,   ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள்,    கூலிக்காக வேலை செய்கிறபடியால் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போவான்,   ஆடுகளுக்காக அவன் கவலைப்படுவதில்லை. நல்ல மேய்ப்பர்கள் தங்கள் மந்தையோடு காணப்படுவதை முக்கியப்படுத்துவார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கூறினது போல உபாத்தியாயர்கள் பதினாயிரம் பேர் இருந்தாலும் தகப்பன்மார் இல்லையே,   சுவிஷேசத்தினிமித்தம் நான் உங்களைப் பெற்றேன். அதுபோல ஒரு தகப்பனுடைய இருதயத்தோடு மந்தையைப் பராமரித்து,    பாதுகாத்து நடத்த வேண்டும். ஆண்டவர் பேதுருவைப் பார்த்து என்னில் அன்பாயிருக்கிறாயா? என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். இயேசுவிடத்தில் அன்பு கூர்ந்து,   ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அவருடைய அன்பின் இருதயத்தை உணர்ந்து,   கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தையை,   அதே சிந்தையோடும்,   இருதயத்தோடும் மேய்க்க வேண்டும். கடமைக்காகவும்,   ஆதாயத்திற்காகவும்,  இறுமாப்பாகவும், கட்டாயத்தின் பேரிலும் அல்ல,   மனப்பூர்வமான மனதோடும்,   உற்சாகத்தோடும் அப்பணியைச் செய்ய வேண்டும். 

ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் பண்ணுகிற  மேலான பணியை உங்களை நம்பி கர்த்தர் கொடுத்திருக்கிறார். உங்களை நடத்துகிறவர்கள்,   உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய்  விழித்திருக்கிறவர்களானபடியால்,   அவர்கள் துக்கத்தோடே அல்ல,   சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி,   அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்,   அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாது (எபி. 13:17). ஒரு தேசத்தின் அரசாங்கம் தன் குடிகளுடைய சரீர பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆனால் ஆத்துமாவுக்கு உத்தரவாதம் தரமுடியாது. சரீரத்தைப் பார்க்கிலும்,   ஆத்துமா விலையேறப் பெற்றது. ஒரு மனுஷன் மரிக்கும் போது,   அவனுடைய சரீரம் மண்ணாயிருப்பதினால் அது மண்ணுக்கே திரும்பும்,   தரித்திரன் ஐசுவரிய வான் எல்லாருடைய சரீரமும் மண்ணுக்குத் திரும்பும் (ஆதி. 3:19,   பிரசங்கி 12:7). ஆதாம் என்றாலே செம்மண் என்று  அர்த்தம். அதுபோல எல்லா மனிதர்களுடைய ஆவியும் தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி,   ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,   மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:17) என்று வேதம் கூறுகிறது. சுவாசம் கர்த்தரிடத்திலிருந்து வந்ததினால் அது கர்த்தரிடம் திரும்பிச் செல்லும். ஆனால் ஆத்துமா அழிவில்லாது (immortal),   ஒரு ஆத்துமா மீட்கப்பட்டதாய்,   இரட்சிக்கப்பட்டதாகக் காணப்படும் போது,   அது நித்திய மோட்சம் செல்லும்,   இல்லையெனில் அது நித்திய அக்கினி கடலுக்குச் செல்லும்,   அங்கே என்றென்றைக்கும் காணப்படுவோம்.  ஆகையால்தான் உள்ளான மனுஷனாகிய ஆத்துமா மிகவும் விலையேறப் பெற்றது,   அழிவில்லாதது. மனுஷன் உலகம் முழுவதையும் ஆயத்தப்படுத்தினாலும்,   தன் ஜீவனை,   ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன என்று ஆண்டவர் கேட்டார். அந்த விலையேறப் பெற்ற ஆத்துமாவிற்கு உத்தரவாதம் பண்ணுகிற மேலான பணியைக் கர்த்தர் மேய்ப்பர்களிடமும்,   போதகர்களிடமும் ஒப்படைத்திருக்கிறார். ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்கு நேராக நடத்தி,   பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் படிக்குச் செய்து,   பரிசுத்தாவியின் வரத்தை பெறும்படிக்கு நடத்தி,   கர்த்தருடைய வார்த்தையை கற்றுக் கொடுத்து,   இயேசுவின் சிந்தையையும்,   சாயலையும் அணியும் படிக்குச் செய்யும் போது,   இயேசு மணவாட்டி சபையைச் சேர்த்துக் கொள்ள வரும்போது,   அவருடைய வருகையில், நம் கரங்களில் கர்த்தர் ஒப்புக் கொடுத்து ஆத்துமாக்களைக் கொண்டு நிறுத்தும் போது,   ஆண்டவர் உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே என்று அழைக்கிற அந்த நாள் பாக்கிய நாளாய் காணப்படும். அந்த உத்தரவாதத்தை உணர்ந்து கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யும் போது,   பிரதான மேய்ப்பன் வெளிப்படும் போது,   மகிமையுள்ள வாடாத கிரீடத்தைத் தந்து உங்களைக் கனப்படுத்துவார்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *