ஒன்றுக்குங் கவலைப்படாமல் இருங்கள்:-

பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஆங்கில வேதாகமத்தில் Anything என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கும் நாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதே தேவ சித்தம். இயேசு தன்னுடைய மலை பிரசங்கத்தில் (மத்தேயு 6:25-34) கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்று போதித்தார். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? என்று இயேசு கேட்கிறவராக காணப்பட்டார். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் தான் வசனத்தைக் கேட்கிறவர்களாய் இருந்தாலும் உலக கவலையினால் அமிழ்ந்து போகிறார்கள்.

இயேசு தன்னுடைய சீடர்களோடு கூட படகில் பிரயாணம் செய்யும்போது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்று இயேசுவை பார்த்து கேட்டார்கள். மலை பிரசங்கத்தில் கவலைபடாதிருங்கள் என்று பிரசங்கித்த இயேசுவை பார்த்து இப்பொழுது சீஷர்கள் உமக்கு கவலை இல்லையா என்று கேட்கிறார்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் இப்படி பிரச்சனை என்னும் பலத்த காற்று அடிக்கும்போது, அலைகள் மோதும்போது கவலைபடாதிருங்கள்.

பவுலுக்கு உண்டான பிரச்சனையை போல நமக்கு உண்டாகவில்லை. ஆனால் அவன் சொல்லுகிறான் கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் (அப் 20:23,24) என்பதாக.

ஆகையால் ஒன்றைக்குறித்தும் நீங்கள் கவலை கொள்ளாதிருங்கள். எதிர்காலத்தை குறித்து கவலை, வேலையை குறித்த கவலை, பிள்ளைகளை குறித்து கவலை, மனிதர்கள் கொடுக்கும் அச்சுறுத்தலினால் வரும் கவலை, சரீரத்தில் வரும் வேதனையினால் உண்டாகும் கவலை இப்படி ஒன்றும் உங்களை பாரப்படுத்த வேண்டாம். எல்லாவற்றையுங்குறித்து (Everything)உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேது 5:7). அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *