அப் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
அழிக்கும் சக்தி கொண்ட வெடிகுண்டு என்ற சொல்லுக்கு மூலப்பதம் தான் டுனாமிஸ் என்ற கிரேக்க சொல். டைனமைட் என்ற ஆங்கில வார்த்தையும் இதிலிருந்து வந்தது. சந்துருவின் அரண்களை நிர்மூலமாக்கும் தேவ பெலன் தான் டுனாமிஸ். இயேசு டுனாமிஸ் என்று சொல்லப்படும் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய வல்லமையினால் ஒருவரை நிரப்பும்போது ஒரு அசூரபெலன் கிடைக்கும், பலத்த செயல்கள் நடக்கும், அற்புத அடையாளங்கள் நடக்கும். மாத்திரமல்ல, பிசாசின் கோட்டைகளை உடைக்க அசாதரணமான வல்லமை கிடைக்கும்.
இன்றைக்கு பிசாசை விரட்ட அநேகருக்கு பயம். வசனம் சொல்லுகிறது பிசாசின் தந்திரங்கள் நாம் அறியதைவைகள் அல்லவே. பிசாசு ஒருவேளை தந்திரசாலியாக இருக்கலாம்; ஆனால் உங்களை காட்டிலும் அறிவாளியல்ல; உங்களை காட்டிலும் வல்லமையானவனும் அல்ல. அவனுக்கு வல்லமை இருந்தாலும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு கொஞ்சம் கூட ஈடாக சொல்ல முடியாது. அப்படியென்றால் பரிசுத்த ஆவியானவர் உங்களை தன்னுடைய வல்லமையால், உன்னதத்தின் பெலனால் நிரப்பும்போது, பிசாசை வீழ்த்தி தள்ளுகிற ஒரு அசூரப்பெலன், அசூர வல்லமை (டுனாமிஸ்) உங்களுக்கு இருக்கும். இயேசு பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்கினார். நீங்களும் இந்த வல்லமையை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெற்றுக்கொள்ள அவர் பாதத்தில் அமர்ந்திருங்கள். அசாத்தியமான காரியங்களை செய்ய கர்த்தர் உங்களுக்கு உதவுவார்.
ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷனை பார்த்து அவனுக்குள் இருக்கும் பொல்லாத ஆவியை இயேசு அதட்டினார். நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள் (லுக் 4:36). எங்கே இருந்து வந்தது இயேசுவுக்கு இந்த அதிகாரமும் வல்லமையும்? பரிசுத்த ஆவியானவர் அவரை அவ்வளவாக நிரப்பி வைத்திருந்தார். அவர் வல்லமையினால் பிசாசை, அசுத்த ஆவிகளை துரத்தினார். இந்த வல்லமை தான் டுனாமிஸ்.
அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று (லுக் 5:17); அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார் (லுக் 9:1); பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்(அப் 1:8). இப்படிப்பட்ட வல்லமை தான் டுனாமிஸ். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவில் எதை செய்தாரோ, அதை நம்மிலும் செய்கிறார் என்பதை விசுவாசிக்கிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். அப்பொழுது இந்த வல்லமையின் மூலம் நீங்கள் பலத்த செய்கைகளை செய்வீர்கள். சாத்தானின் விக்கிரக தோப்புகளை சூறையாடுவீர்கள். விபச்சார வேசித்தன ஆவிகளை கடிந்துகொள்ளுவீர்கள். எல்லா இருளின் ஆதிக்கங்களையும் நிர்மூலம்பண்ணத்தக்க அசூர பெலன் உங்களுக்கு உண்டாயிருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org