ஏசா 28:11. பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
மேற்குறிப்பிட்ட வசனம் பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் பலத்த காற்றில் இறங்கினபோது நிறைவேறியது. அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் (அப் 2:3,4). மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன் என்று மீண்டும் ஆண்டவர் 1 கொரி 14:21ல் சொல்லுகிறார்.
இந்த உலகத்தில் அநேக பாஷைகள் காணப்படுகிறது. இந்தியாவில் மாத்திரம் 2000க்கும் அதிகமானாக பாஷைகள் காணப்படுகிறது. அநேகருக்கு ஒரு சில மொழிகளில் பேச முடியவில்லையே என்று வருத்தம். அநேகர் அநேக மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் எல்லா பாஷைகளையும் காட்டிலும் மேலான பாஷை அந்நிய பாஷையாக காணப்படுகிறது. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான் (1 கொரி 14:2). நாம் கருத்தோடு எந்த பாஷையில் ஜெபித்தாலும் சாத்தானுக்கு புரிந்துவிடும். அவன் உலகத்திலிருக்கும் அணைத்து மொழிகளையும் கற்று தேர்ந்தவன். ஆனால் அந்நிய பாஷை மாத்திரம் அவனால் புரிந்துகொள்ள முடியாது. ஆகையால் தான் அந்நிய பாஷையில் தேவனோடு இரகசியங்களை பேச வாஞ்சிக்கிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் (1 கொரி 14:4) என்று வசனம் சொல்லுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அந்நிய பாஷையில் நாம் ஜெபிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நமக்கே பக்திவிருத்தி உண்டாக பேசுகிறோம்.
ஆண்டவர் சொல்லுகிறார் அந்நிய பாஷையில் உங்களோடு பேசுவேன். அநேகருக்கு இந்த ஆவிக்குரிய வரம் எனக்கு கிடைக்குமா ? ஆண்டவர் என்னோடு அந்நிய பாஷையில் பேசுவாரா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்நிய பாஷையில் எல்லாரும் பாகு பாடின்றி பேசலாம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். மேல் வீட்டறையில் இருந்த எல்லாரும் வெவ்வேறு பாஷைகளிலே பேசினார்கள்.கொர்நேலியு வீட்டில் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் யாவர்மேலும் பரிசுத்தஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும் பார்த்து எல்லாரும் பிரமிப்படைந்தார்கள்(அப் 10:45). பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் (அப் 19:6). எல்லாரும் அந்நிய பாஷைகளை பேசினார்கள் என்று அப்போஸ்தல நடப்படிகளில் அநேக இடங்களில் வாசிக்கிறோம். நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் (1 கொரி 14:5) என்று பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் தன் விருப்பத்தை தெரியப்படுத்துகிறார். பவுல் சொல்லுகிறான் உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (1 கொரி 14:18). ஆகையால் ஆண்டவர் உங்கள் அனைவரோடும் கூட அந்நிய பாஷையில் பேசுவார் என்பதை விசுவாசியுங்கள். அந்நிய பாஷையின் வரத்தை வாஞ்சியுங்கள், பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org