கொலோ 2:9. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
முதன்முதலாக, இந்த உலகத்தில் தேவனின் பரிபூரணம் கிறிஸ்துவுக்குள் சரீரப்பிரகாரமாக, இயேசு மனுஷகுமாரனாக இருக்கும்போது வாசம் செய்தது. அதுவரைக்கும் தேவனின் பரிபூரணம் யாருக்குள்ளும் இருந்ததில்லை. கிறிஸ்து சரீராத்தில் வெளிப்பட்டபோது தேவனின் பரிபூரணம் அவருக்குள் வந்தது. கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் (கொலோ 1:27) என்று வசனம் சொல்லுகிறது. உங்களுக்குள்ளாக கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார். உங்களுக்குள் இயேசு இருக்கிறார். உங்களுக்கும் இயேசு இருக்கும்போது அவருக்குள்ளாக தேவனுடைய பரிபூரணத்தை நாம் அடைகிறோம். வசனம் சொல்லுகிறது உங்கள் சரீரம் தேவன் தங்கும் ஆலயம். நீங்கள் உங்களுக்குரியவர்கள் அல்ல. கிறிஸ்துவே உங்களுக்குரியவர். ஆகையால் உங்கள் சரீரம் வேசித்தனத்தினாலும், காமவிகாரத்தினாலும் தீட்டுப்படலாகாது.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு சொன்னார்(யோவா 10:30). மாத்திரமல்ல இயேசு பிதாவிடம் சொன்னார் பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு காத்துக்கொள்ளும் (யோவா 17:11)என்றும், அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்(யோவா 17:21) என்றும், நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி (யோவா 17:22) என்றும் வலியுறுத்தி சொல்லுகிறதை பார்க்கலாம். மாத்திரமல்ல பவுல் சொல்லும்போதும் கூட நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:28) என்று சொல்லுகிறதை பார்க்கமுடிகிறது.
ஆகையால் கிறிஸ்து உங்களை ஆளுகை செய்து, அவர் உங்களுக்குள் ஒன்றாய் இருக்கும்போது கிறிஸ்துவுக்குள் இருக்கும் தேவனுடைய பரிபூரணம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் (யோவா 1:16) என்று வசனம் சொல்லுகிறது. தேவன் பரிபூரணமாய் இருக்கிறார். அவரிடம் பழுதொன்றும், குறையும் இல்லை. நீங்கள் வகுப்பில் தேறினவர்களாக இருக்கலாம், வேலையில் திறமையாக வேலை செய்யலாம், தொழிலில் சிறந்து விளங்கலாம், உங்கள் தோற்றம் சிறந்து இருக்கலாம், எப்படி இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் வெற்றிடம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். இந்த வெற்றிடம் இல்லாமல் முழுமையாக தேவ சமாதானத்துடன் ஜீவிக்கவேண்டும் என்றால் தேவனுடைய பரிபூரணம் உங்களுக்குள் கிறிஸ்து இயேசுவின் மூலம் இருந்தால் மாத்திரமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்ய உங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுங்கள். தேவனுடைய பரிபூரணம் உங்களை நிரப்பும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org