சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான் (லூக்கா 6:40).
For audio podcast of this Manna Today, please click the link,
கர்த்தருடைய பிள்ளைகள் நம்முடைய குருவாகிய இயேசுவைப் போல காணப்படும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள். அவருடைய வார்த்தையிலிருந்து கற்றுத் தேறின அனைவரும் அவரைப் போல இருப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். இயேசுவின் வருகையில் அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம் (1 யோவான் 3:2).
நான்கு சுவிஷேசங்களிலும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் இயேசுவை போதகர் என்று அழைக்கப்படுவதைப் பார்க்கமுடியும். அவருடைய மூன்றரை வருட ஊழியத்தில், அனேக முறை ஜனங்களுக்கு உபதேசம் செய்கிற ஊழியத்தைச் செய்தார். தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வார்த்தையை உபதேசித்து, கற்றுக்கொடுத்து தன்னுடைய சீஷராக்கினார். அவரைப் போல ஒருவரும் ஒரு காலத்திலும் பேசினதில்லை. அனேக உவமைகள் மூலமாகவும் ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக் கொடுத்தார், அவருடைய உபதேசத்தில் மூன்றில் ஒரு பகுதி உவமைகளாகக் காணப்படுகிறது. இயேசுவின் வாஞ்சையெல்லாம் அவருடைய சீஷர்கள் அவரைப் போல மாற வேண்டும், அவருடைய சிந்தையைத் தரிக்க வேண்டும், அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்த வேண்டும், நீதிக்குரிய ஜீவியத்தைச் செய்யவேண்டும் என்பதே.
குருவைப் போலச் சீஷன் மாறுவதற்கு, முதலாவது நமக்கு நல்ல பயிற்சி அவசியம். ஆகையால் சீஷன் என்பவன் தொடர்ந்து ஆண்டவரிடமிருந்து கற்றுக் கொள்ள வாஞ்சிக்க வேண்டும்;. அவருடைய வார்த்தையைத் தியானித்து, நம்முடைய வாழ்க்கையிலிருந்து எந்த காரியங்களை விடும் படிக்குக் கர்த்தருடைய வார்த்தை உணர்த்துகிறதோ, அவைகளை விட வேண்டும். மன்னித்து, ஒப்புரவாகும் படிக்கு கற்றுக் கொடுக்கும் போது கீழ்ப்படிய வேண்டும். இரண்டாவது நாம் அவரை பின்பற்றும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இயேசு தன் சீஷர்களை ஊழியத்திற்கு அழைக்கும் போது, என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று அழைத்தார். நா னே நல்ல மேய்ப்பன், என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்து எனக்குப் பின் செல்லுகிறது என்றும் கூறினார். ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
அனேகர் உலகத்தில் காணப்படுகிறவர்களை முன்மாதிரிகளாய் வைத்திருப்பவர்கள், அவர்களுடைய உண்மை ரூபம் வெளிப்படுகிற வேளையில் இதுவரை இவரையா முன்மாதிரியாக வைத்திருந்தோம் என்று வருத்தப் படுவார்கள். இந்த பூமியில் தோன்றி, கவனித்துப் பார்க்கத் தக்க ஜீவியம் செய்தவர் இயேசு ஒருவரே. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவைக் கவனித்துப் பார்த்து, அவருடைய பாதச் சுவடுகளைப் பின்பற்ற நாம் நம்மை அர்ப்பணிப்போம். உலகத்தின் குடிகள் நம்மில் இயேசுவைக் காண விரும்புகிறார்கள். நம்முடைய குருவாகிய இயேசு விடத்திலிருந்து நாம் கற்று, தேறி அவருக்கு ஒத்த மாதிரியின் ஜீவியம் செய்யக் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் அருள் புரிவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar