அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது, அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள் (சங்கீதம் 126:2).
ஒரு புதிய மாதத்திற்குள்ளாக நம்மை நடத்திக் கொண்டு வந்த தேவனுக்கு நன்றி பலிகளைச் செலுத்தி அவரை மகிமைப் படுத்துவோம். இந்த புதிய மாதத்தில் கர்த்தர் உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்து உங்களை மகிழப் பண்ணுவார். கர்த்தர் யூதாவின் ஜனங்களுடைய சிறையிருப்பை மாற்றின போது, புறஜாதிகள், கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று சொல்லிக்கொண்டார்கள். அப்படியே கர்த்தர் உங்களுக்கும் பெரிய காரியங்களைச் செய்து, உங்களைக் களிகூரச் செய்யும் போது, புறஜாதிகள் அதைக் கண்டு கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். ஒருவேளை இதுவரை புறஜாதிகள் உங்களை தூசிக்கலாம், உங்கள் நிலைமையைக் கண்டு உறவினர்களும் நண்பர்களும் கூட ஒதுங்கிவிடலாம். ஊழியத்தின் பாதைகளில், கடினமான சூழ்நிலைகள் வரும் போது உதவிகள் இல்லாததினால் நீங்கள் கலங்கி நிற்கலாம். ஆனால் ஒரு நாள் வருகிறது, கர்த்தர் உங்களுக்காக நீங்கள் நினைப்பதைப் பார்க்கிலும் எண்ணுவதைப் பார்க்கிலும் மிகப் பெரிய காரியங்களைச் செய்யப்போகிறார். கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றின வேளையில், யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளி ஆசீர்வதித்தார். அப்போது, அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம் பண்ணினார்கள் என்று வேதம் கூறுகிறது. அதுபோல கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதங்களைத் தந்து உங்கள் தலையை நிமிரப் பண்ணும் போது, உங்களை ஒடுக்கினவர்களும் அசட்டை பண்ணின யாவரும் உங்கள் காலடியில் பணிந்து, உங்களைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி, எழுபது வருஷங்களுக்குப் பின்பு செருபாபேல், எஸ்றா, நெகேமியா என்பவர்களின் தலைமையின் கீழ் மீண்டும் எருசலேமுக்கு திரும்பி வந்தார்கள். கர்த்தர் அவர்களுடைய சிறையிருப்பைத் திருப்பும் போது, அது அவர்களுக்குச் சொப்பனம் காண்பது போல, நம்பக் கூடாததாய் காணப்பட்டது. இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன் (எரே. 29:10) என்று வாக்களித்த தேவன், குறித்த வேளை வந்தபோது அப்படியே அவர்களுடைய சிறையிருப்பை மாற்றி அவருடைய வார்த்தையை நிறைவேற்றினார். ஆனால் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து விடுதலைக்காய் காத்திருந்த யூதாவின் குடிகள், அந்த வேளை வந்தபோது, அவர்களால் நம்ப முடியவில்லை. யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்து தேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று யாக்கோபுக்கு அவனுடைய குமாரர்கள் அறிவித்த போது, அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது. அவன் அவர்களை நம்பவில்லை என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுடைய சிறையிருப்புகளைக் கர்த்தர் மாற்றுகிற வேளையும் அவர் உங்களுக்கு அற்புதம் செய்யும் நேரமும் வந்துவிட்டது. அவைகள் நடக்கும் போது, உங்களுக்கு ஆச்சரியமாகவும், நம்பக் கூடாததும், கிரகிக்கக்கூடாததும், சொப்பனம் காண்பது போலக் காணப்படும்.
கர்த்தர் யூதாவின் ஜனங்களுடைய சிறையிருப்பை மாற்றின வேளையில் அவர்களுடைய வாய் நகைப்பினாலும், நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது (சங். 126:2). அதுபோல உங்கள் காத்திருப்புக்குக் கர்த்தர் ஒரு முடிவை உண்டாக்கும் போது உங்கள் வாய் நகைப்பினாலும், ஆனந்தத்தினாலும் நிறைந்திருக்கும். ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது, சாராள் தேவன் என்னை நகைக்கப்பண்ணினார், இதைக் கேட்கிற யாவரும் என்னோடே கூட நகைப்பார்கள் என்று அறிக்கையிட்டாள். காரணம் சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலேயும், கர்ப்பம் செத்துப் போனது என்ற ஒருவளாலேயும் வானத்தின் நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறக்கப் போகிறார்கள் என்ற நம்பக்கூடாத காரியத்தை அவர்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த வேளையில், அது அவர்களுக்கு நகைப்பாயிருந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை உங்கள் வாய் இப்போது புலம்பிக் கொண்டு காணப்படலாம், பலவிதமான பாடுகளின் பாதையில் நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கலாம். நம்முடைய தேவன், புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாற்றுகிறவர், சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் தருகிறவர். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். நம்முடைய தேவன் அசாத்தியமானவற்றைச் சாத்தியமாக்குகிறவர். அவர் செய்ய நினைத்த காரியங்கள் ஒருபோதும் தடைப்படாது. ஆகையால் அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றும் போது உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். கர்த்தர் இந்த புதிய மாதத்தில், கண்ணீரோடே விதைக்கிற உங்களைக் கெம்பீரத்தோடே அறுக்கும்படிக்குச் செய்து, உங்களை மகிழச் செய்து, கனம் பண்ணுவது உறுதி. புறஜாதிகளின் கண்கள் காணும்படியாக கர்த்தர் உங்களுக்கு பெரிய காரிங்களைச் செய்யும் போது, நீங்கள் இன்னும் கர்த்தரை நெருங்கி ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar