நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதி. 12:2, 3).
கர்த்தர் ஆபிராமுக்கு கொடுத்த வாக்குத் தத்தமாக மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் காணப்படுகிறது. இஸ்ரவேல் என்ற தேசத்தை எபிரேயருக்காக உருவாக்குவதற்கு, கர்த்தர் ஆபிராமை முதல் எபிரேயனாக தெரிந்து கொண்டார். அதற்கு முன்பு அவன் மெசொப்பொத்தாமியா நாட்டிலே ஊர் என்ற கல்தேயருடைய தேசமாகிய பாபிலோனில் காணப்பட்டான். அங்கே அவன் வேரே தேவர்களைச் சேவித்தான் (யோசுவா 24:2). அங்கே மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி, நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா (அப். 7:2, 3) என்றார். ஆபிராம் அதரிசனமான தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவன் தகப்பனாகிய தேராகோடும், அவன் சகோதரன் ஆரானுடைய குமாரனாகிய லோத்தோடும், தன் மனைவியாகிய சாராளோடும் கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
அவர்கள் ஆரான் என்ற இடம் மட்டும் வந்தபோது, அங்கேயே இருந்துவிட்டார்கள். தேராகு என்பதற்குத் தாமதிப்பது, காலம் தாழ்த்துவது என்பது அர்த்தமாகும். ஆபிராம் கர்த்தருடைய அழைப்பிற்கு கீழ்ப்படிந்து தொடர்ந்து கானானுக்குச் செல்வதற்குத் தடையாகக் கால தாமதம் செய்கிறவனாய் அவன் தகப்பனாகிய தேராகு காணப்பட்டான். ஆகையால் ஆபிராம் கூட தனக்குத் தரிசனமான கர்த்தருடைய சத்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படியக் கூடாமல், கானானுக்குப் பதிலாக ஆரானிலே தங்கிவிட்டான். இந்நாட்களில் நம்முடைய வாழ்க்கையிலும் கூட அனேக தேராகுகள் காணப்படக் கூடும். விசுவாச ஓட்டத்திற்குத் தடையாக, கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதற்குத் தடையாக, உற்சாகத்தோடு அவரை சேவிப்பதற்குத் தடையாகக் காணப்படுகிற தேராகுகளை இனம் கண்டு அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். பாரமாய் தோன்றுகிற எல்லாவற்றையும் விலக்கி விடும் படிக்கு வேதம் ஆலோசனைக் கூறுகிறது. அப்பொழுது பரம கானானை நோக்கித் தொடர்ந்து ஓடுவதற்கு எளிதாக இருக்கும். ஆரான் என்ற ஊரின் பெயருக்கு வறண்டு போன, பலனற்ற என்பது அர்த்தமாகும். உங்கள் வாழ்க்கையில் வறட்சி காணப்படுகிறதா? கரங்களின் கிரியைகளுக்குத் தக்க பலன் இல்லையே என்ற கேள்விகள் காணப்படுகிறா? இயேசுவாகிய இலக்கை நோக்கி ஓடவேண்டி நீங்கள், இப்போது எந்த ஆரானிலே பின்வாங்கிக் காணப்படுகிறீர்கள் என்பதை சோதித்துப் பாருங்கள்.
தேராகு மரிக்கும் வரைக்கும், ஆரானிலே கர்த்தர் அபிராமுக்கு தரிசனமாகவுமில்லை, அவனிடம் பேசவுமில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய சத்தம் உங்கள் செவிகளில் தொனிக்கிறதா? கடைசியாகக் கர்த்தர் அவருடைய வசனங்கள் மூலம் உங்களோடு பேசுகிற சத்தத்தை எப்போது கேட்டீர்கள்?. தேராகுகளோடு, ஆரானில் காணப்பட்டால் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க முடியாது. ஆனால் தேராகு மரித்த பின்பு, இரண்டாவது முறையாகக் கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்றார். முதல் முறை தரிசனமான வேளையில், உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்படு என்றவர், இரண்டாம் முறை உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்படு என்று சொல்லுகிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான் (ஆதி. 12:4). ஆகையால் கர்த்தர் அவனுக்கு ஏழு விதங்களில் உன்னை ஆசீர்வதிப்பேன், என்று வாக்களித்த அவருடைய வார்த்தையை அவனில் நிறைவேற்றினார். உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று முதலாம் வாக்குத்தத்தைக் கொடுத்தார், ஆகையால் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாரும் ஆபிராமை தங்கள் தகப்பன் என்று கூறுகிறார்கள். இரண்டாவது உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார், ஆபிராம் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான் (ஆதி. 13:2), கர்த்தர் அவனைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார் என்று ஆதி. 24:1ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிராமின் வேலைக்காரனாகிய எலியேசர், கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார், கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார் என்றான். அவனுடைய ஆசீர்வாதங்களைப் பூமி தாங்கக் கூடாமல் இருந்தது. நான்காவதாக, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் என்றார், அப்படியே அவனைக் கனம் பண்ணி அவனை தன் சிநேகிதாக்கினார். ஆபிரகாமின் குமாரனாய் இயேசுகிறிஸ்துவும் பிறந்தார் (மத். 2:1). ஐந்தாவது, நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்றவர், அவ்வண்ணமாகவே அவனை அனேகருக்கு ஆசீர்வாதமாக வைத்தார். ஆறாவது, உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்றார், வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் யூதர்களுக்கு உதவியாகக் காணப்பட்ட எல்லா தேசங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். அமெரிக்கா தேசத்தின் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் முதன்முதலாக இஸ்ரவேல் தேசத்தை 1948ம் வருடம் ஒரு தேசமாக அங்கீகரித்தர், அந்த தேசம் இன்றும் உலகத்தின் வல்லரசாகக் காணப்படுகிறது. ஆறாவது, உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன் என்றவர், எதிராய் எழும்பின அத்தனை ராஜ்யங்களையும் அவர்களுக்கு முன்பாக மண்டியிடும் படிக்குச் செய்தார். ஏழாவது, பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் கூறினிதினாலே, அவனுடைய ஆசீர்வாதங்கள் அவனோடு நின்றுவிடாமல், பூமியிலுள்ள எல்லா ஜாதிகளும், இனங்களும், வம்சங்களும் அவனுக்குள் ஆசீர்வதிக்படும்படிக்கு செய்தார். உலகளாவிய ஜனங்களுக்கு அவனை ஒரு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாய் கர்த்தர் வைத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆபிரகாமின் அத்தனை ஆசீர்வாதங்களும் கிறிஸ்தேசுவின் மூலமாக உங்களுக்கு உரியது என்று கலாத்தியர் 3:14ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் ஆபிரகாமிற்குக் கர்த்தர் கொடுத்த ஏழு விதமான ஆசீர்வாதங்களும் உங்களைத் தொடரும். நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, பின் மாற்றம் அடைந்து, காலதாமதம் செய்யாதபடிக்கு, பரம கானானாகிய புதிய எருசலேமைச் சுதந்தரிப்பதற்குத் தொடர்ந்து ஓடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar