எமோரியருடைய அக்கிரமமும், எகிப்தின் அடிமைத்தனமும்.

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி,     உன்  சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,     அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும்,     அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும்,     நீ நிச்சயமாய் அறியக்கடவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள், ஏனென்றால்  எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை.  (ஆதி. 15:13,    16).

ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் கானான் தேசத்தைக் கர்த்தர் வாக்குத்தத்தத்தின் தேசமாகக் கொடுத்தார். ஆனாலும் ஆபிரகாமின் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,     அத்தேசத்தாரை நானூறு வருஷம் சேவிப்பார்கள் என்றும்,     அவர்களால் உபத்திரவப்படுவார்கள் என்றும் கர்த்தர் கூறினார். அதற்குக் காரணம் கானானில் ஏற்கனவே குடியிருக்கிற எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை. கர்த்தருடைய வார்த்தையின் படியே ஆபிரகாமின் சந்ததி,     யாக்கோபின் நாட்களில் எகிப்திற்குப் போனார்கள். அதற்கு முன்பே யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு அங்கே காணப்பட்டான். யோசேப்பு மரித்த பின்பு,     அவனை அறியாத ராஜா எகிப்தில் எழும்பினான். அவன் எபிரேயர்களுடைய வாழ்க்கையை கசப்பாக்கி,     அவர்களை தன்னுடைய பட்டணங்களைக் கட்டுகிற அடிமைகளாக்கினான். அதினிமித்தம் நானூறு வருஷங்கள் எகிப்தில் உபத்திரவங்களை அனுபவித்து,     அடிமைகளாய் காணப்பட்டார்கள்.

வாக்குத்தத்தின் தேசமாகிய கானானிலிருந்து,     வாக்குத்தத்ததின்  சந்ததியைக் கர்த்தர் எகிப்திற்கு அனுப்பியதின் காரணம்,     கானானில் குடியிருந்த எமோரியரின் அக்கிரமம் நிறைவாகவேண்டும்.  அதுவரைக்கும் கர்த்தர் அவர்களைக் கானானில் விட்டு வைத்திருந்தார். அவர்களுடைய அக்கிரமத்தின் பட்டடியல் லேவியராகமம் 18ல் எழுதப்பட்டிருக்கிறது. நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்,     தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது,     ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்,     தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று (லேவி. 18:24-16). இவற்றை நானூறு வருஷங்களுக்கு முன்பாக ஆபிரகாமின் நாட்களிலேயே கர்த்தர் வெளிப்படுத்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே,     துன்மார்க்கமாய் ஜீவிக்கிறவர்களுக்கும்,     துன்மார்க்கமாய் ஆளுகை செய்கிறவர்களுக்கும்,     பாவங்களால் நிறைந்து காணப்படுகிற தேசங்களுக்கும் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வருவது உறுதி. அநீதிக்குத் தக்க தண்டனை உடனே வராததினால்,     துன்மார்க்கர்களுடைய இருதயம் கர்வம் கொள்ளுகிறது. இந்நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லா விதங்களிலும் நெருக்கப் படுகிறார்கள். சபைகள் நொறுக்கப் படுகிறது,     ஊழியர்கள் தாக்கப் படுகிறார்கள். கர்த்தர் ஏன் அவர்களை விட்டுவைத்திருக்கிறார் என்று நீங்கள் கேட்கக் கூடும்,     ஏன் அவர் காணாதவர் போலக் காணப்படுகிறார் என்றும் நினைப்பதுண்டு. கர்த்தர் எல்லாவற்றையும் கவனிக்கிறார். அவர்களுடைய அக்கிரமங்கள்  நிறைவாகுமட்டும்  கர்த்தர் அவர்களுக்குத் தருணம் கொடுக்கிறார்,     பின்பு அவர்களை விசாரிக்கிற வேளைகள் நிச்சயமாக வரும்.

எமோரியர்களுக்கு நானூறு வருஷங்களுக்கு மேல் கர்த்தர் கொடுத்தும் அவர்கள் மனம் திரும்பவில்லை. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப்  போக்கடிக்கிறார்கள் (யோனா 2:8),     என்ற வார்த்தையின் படி கிருபையின் நாட்களை இழந்து விட்டார்கள். எல்லாருக்கும் தருணங்களைக் கொடுக்கிற கர்த்தர்,     நினிவேக்கு நாற்பது நாட்களைக் கொடுத்தார்,     நேபுகாச்நேச்சாருக்கு பன்னிரண்டு மாதங்களைக் கொடுத்தார்,     பெல்ஷாத்சாருக்கு சுமார் பன்னிரண்டு மணி நேரங்களைக் கொடுத்தார். கிருபையின் நாட்களைப் புறக்கணித்தால் அழிவு வருவது உறுதி,     அது தனிப்பட்ட நபராயிருந்தாலும்,     குடும்பங்களாயிருந்தாலும்,     தேசங்களாயிருந்தாலும்,      அவர்கள் அக்கிரமம் நிறைவேறும் போது அப்படியே சம்பவிக்கும்.  எமோரியருடைய அக்கிரம் நிறைவேறின நாட்களில் யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரவேலர்கள் கானானுக்குள் வந்து,     இவர்களையும் மற்ற எல்லா ஜாதிகளையும் அங்கிருந்து துரத்திவிட்டு,     தேசத்தை தங்களுக்கு உடையதாக்கினார்கள். ஆகையால் கர்த்தருக்குப் பயந்து,     தீமையை விட்டு விலகி ஜீவியுங்கள். அப்பொழுது எல்லாவிதமான அழிவுகளுக்கும் கர்த்தர் உங்களை விலக்கிக் காப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *