மத் 3:16,17. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
இயேசு சுமார் 30 வருடங்கள் சாதாரண மனிதராக வாழ்ந்து வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று எப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் இறங்கினாரோ அப்பொழுது அவருக்கு ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது. புறாவை போல ஆவியானவர் இறங்கி வருவதை ஆவிக்குரிய கண்களால் பார்த்தார். அசாதாரணமான சத்தத்தை கேட்டார்.
பிலேயாம் தன் கண்களை ஏறெடுத்து பார்த்தான். தேவ ஆவி அவன்மேல் வந்ததால் கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது என்று சொல்லி யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!, இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டுகொண்டான் (எண் 24:1-7).
எலிசாவைவை பரிசுத்த ஆவியானவர் நிரப்பி இருந்தார். சீரிய இராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக பள்ளியறையில் பேசுவதை எலிசா அறிந்து அறிவிக்கிறவனாக காணப்பட்டான். சீரிய இராஜா எலிசாவை பிடிக்கும்படி அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். எலிசாவின் வேலைக்காரன் அவர்களை பார்த்து பயந்தான். அப்பொழுது எலிசா பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான் (2 இராஜா 6:15-17).
இப்படியாக தொடர்ந்து பேதுரு ஞான திருஷ்டி அடைந்தான். புறஜாதி ஜனங்களாகிய கொர்நேலியுவின் வீட்டாரின் கண்கள் திறக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டார்கள். ஆதி சபையார் அசாதாரணமான பார்வையில் தங்கள் ஊழியங்களை கட்டினார்கள். தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். அதுபோல நீங்களும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு நிரப்பப்படும்போது அசாதாரண காரியங்களை பார்க்கும்படி ஆவிக்குரிய கண்களை கர்த்தர் திறப்பார்.
சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் என்று ஜெபியுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆவிக்குரிய பார்வையை கொடுப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org