கர்த்தருக்குப் பிரியமானவன் என்ன செய்வான்?

ஏசா 48:14. நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

பாபிலோன் என்ற வார்த்தை Babel என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு அர்த்தம் குழப்பம் (Confusion) என்பதாய் காணப்படுகிறது. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. அந்த நேரத்தில் ஜனங்கள் நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். அப்படிப்பட்டதான பெருமை அவர்களுக்குள்ளாக வந்தது. அந்நேரத்தில் கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிபோகும்படி செய்தார். அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினார். மாத்திரமல்ல, பாபிலோன் மகா வேசியான நகரம். பாபிலோன் மதுபானமுள்ள நகரம். பாபிலோன் பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிருந்த நகரம். அப்படிப்பட்ட நகரத்தில் கர்த்தருக்கு பிரியமானவன் கர்த்தருடைய சித்தத்தை செய்வான்.

ஆலயங்களுக்குள்ளாக, சபையில் இருக்கும்போது கர்த்தருடைய சித்தத்தை செய்யலாம். அதே வேலையில் பாபிலோனில் இருக்கும்போது, அசுத்தங்கள், விபச்சாரங்கள் பெருகியிருக்கும்போது, உலகத்தால் கறைபடாமல் கர்த்தருடைய சித்தத்தை செய்கிறவன் தான் கர்த்தருக்கு பிரியமானவன். சிலர் வெளிநாடுகளில் இருக்கும்போது சபைக்கு நன்றாக செல்வார்கள், ஊழியங்களை செய்வார்கள். ஆனால் தாய் நாட்டிற்கு சென்றால் அங்கே காணப்படும் நண்பர்களோடு உல்லாசமாக திரிந்து கர்த்தருக்கு ஒவ்வொத காரியங்களை செய்வார்கள். சிலர் வாரத்தில் ஒருநாள் கர்த்தருக்கு பிரியமானதை செய்வார்கள், எஞ்சியுள்ள ஆறு நாட்களும் உலகத்தின் பின்னாக சென்று குடியும், மதுவுமாக இருப்பார்கள். கர்த்தருக்கு பிரியமானவர்கள் எங்கிருந்தாலும் அவருடைய சித்தத்தை செய்வார்கள்.

கல்தேயர் என்னும் பட்டணத்தில் தேராகும் அவனுடைய குமாரர்கள் ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்கள் இருந்தார்கள். ஆரான் அங்கே தேராகு மரிக்குமுன்னே மரித்தான். அந்த இடம் விக்கிரகம் நிறைந்த இடமாக இருந்ததால் ஆண்டவர் ஆபிரகாமை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்தார். கர்த்தருக்கு பிரயமானவனுடைய புயம் கல்தேயர் என்னும் விக்கிரகங்கள் மேல் இருக்கும் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் எங்கிருந்தாலும், எங்கு போனாலும், எங்கு வந்தாலும் நீங்கள் கர்த்தருக்கு பிரயமானதை செய்யுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *