யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்ட படியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, பவுல் அவர்களிடத்திற்குப் போனான் (அப். 18:2).
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்ற குடும்பம், யூதர்களாய் காணப்பட்டதினாலே இத்தாலியிலிருந்து ரோமர்களால் துரத்தப்பட்டார்கள். இவர்கள் கொரிந்து பட்டணத்தில் வந்து கூடாரம் பண்ணுகிற தொழில் செய்து வாழ்ந்து வந்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தில் கொரிந்து பட்டணத்திற்கு வந்தான். அவனை இவர்கள் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு, தங்களோடு தங்கியிருக்கும் படிக்கும் அனுமதித்தார்கள். பின்னாட்களில் பவுல் இவர்களைக் குறித்து எழுதும் போது, கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள், அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள், அவர்களுக்கு நான்; நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன் என்றான் (ரோமர் 16:3,4), பவுலுடைய ஜீவன் தப்புதற்காக, அவனுக்குப் பதிலாக தங்களை மரிக்கும்படிக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். புதிய ஏற்பாட்டில் விருந்தோம்பலுக்கு இந்த குடும்பத்தை நல்ல ஒரு உதாரணமாகக் கருதலாம். அத்துடன் இந்த மூன்று பேருக்குள்ளும் காணப்பட்ட நட்பானது, பவுலின் ஊழியத்தின் கடைசி நாட்கள் வரைக்கும் காணப்பட்டது, பவுல் மரிப்பதற்கு முன்பு, அவன் எழுதிய கடைசி நிருபத்தில், பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு என்று 2 தீமோத். 4:19ல் எழுதினார். சுமார் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவ வசனத்தை உபதேசித்துக் கொண்டு வந்தான். அப்போஸ்தலனாகிய பவுலின் கொரிந்து பட்டண ஊழியத்திற்கும், பின்னாட்களில் அங்கே தோன்றின கொரிந்து சபைக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா குடும்பமும் காரணமாயிருந்தது. கர்த்தருடைய பிள்ளைகள் எல்லாரும் ஆசாரியர்களாகவும், லேவியர்களாகவும் அழைக்கப் பட்டவர்கள், ஒருவேளை ஊழியம் செய்யவில்லை என்றாலும் ஊழியங்களுக்கு உதவியாகக் காணப்படும் போது, தேவ வசனம் வளர்ந்து பெருகும், அனேக சபைகள் புதிதாகத் தோன்றுவதற்கு அது காரணமாக அமையும். அப்போது கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நினைத்தருளி ஆசீர்வதிப்பார்.
பின்பு பவுல் எபேசு பட்டணத்திற்கு வந்த போது, ஆக்கில்லா பிரிஸ்கில்லா குடும்பமும் அவனோடு கூட எபேசுவுக்கு வந்தார்கள். பவுல் எபேசு பட்டணத்தில் ஊழியம் செய்து கொண்டு வந்த வேளையில் அவன் எருசலேமுக்கு போகவேண்டியதாயிருந்ததால், இவர்கள் இரண்டு பேரையும் எபேசுவிலே விட்டு அங்குக் காணப்பட்ட ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படிக்கு விட்டுச் சென்றான். இந்நாட்களில் அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான். அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் அவனையும் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள். பவுலுக்கு காண்பித்த அதே விருந்தோம்பலை அப்பொல்லோவுக்கும் காட்டினார்கள் அத்துடன் தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள், இயேசுவே மேசியாவாகிய கிறிஸ்து என்பதை கர்த்தருடைய வார்த்தையின் மூலம் கற்றுக் கொடுத்தார்கள். பின்னாட்களில் அவன் இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு யூதர்களுக்கு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான் (அப். 18:28). சாதாரண கூடாரத் தொழிலாளிகளாய் காணப்பட்டவர்கள், கர்த்தரைப்பற்றிய ஆழமான உபதேசத்தை பவுலிடமிருந்து கற்றுக் கொண்டு, இப்போது தங்களை விட அதிக கல்வியறிவுள்ள அப்பொல்லோவுக்கு அவருடைய வழிகளைக் கற்றுக் கொடுக்கிற அளவு வளர்ந்து, அவனைக் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக மாற்றி விட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாக ஒரு ஆவிக்குரிய வளர்ச்சி காணப்பட வேண்டும். பவுலுக்கு உதவியாக காணப்பட்டவர்கள், அப்பொல்லோவுக்கு கர்த்தருடைய வழியைக் கற்றுக் கொடுத்தது போல, நாம் எல்லாரும் தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் கர்த்தருடைய மார்க்கத்தை ஆழமாய் கற்றுக் கொண்டு, அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க கடமைப்பட்டவர்களாகக் காணப்படுகிறோம். சுஷேசத்தை அறிவிப்பது நம் எல்லார் மேலும் விழுந்த கடமையாகக் காணப்படுகிறது.
ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் பின்னாட்களில் தங்கள் வீட்டில் சபையை நடத்தினார்கள் என்று 1 கொரி. 16:19ல் எழுதப்பட்டிருக்கிறது. உதவி செய்தவர்கள், கர்த்தருடைய வழிகளைக் கற்றுக் கொடுத்தவர்கள், இப்போது தங்கள் வீட்டில் சபையை நடத்தினார்கள் என்பது, அவர்களுடைய தொடர்ச்சியான விசுவாச ஓட்டத்தின் வெளிப்பாடாகவும், ஆவிக்குரிய வளர்ச்சியாகவும் காணப்படுகிறது. ஆதிசபையின் துவக்க நாட்களில் வீடுகளில் ஆராதித்தார்கள், காரணம் கட்டிடங்கள் அந்நாட்களில் கட்டப்படவில்லை, அதற்குரிய வசதிகள் காணப்படவில்லை. பிலேமோனுடைய வீட்டிலும் சபை காணப்பட்டது (பில. 2), நிம்பாவுடைய வீட்டிலும் சபை காணப்பட்டது(கொலோ. 4:15). பின்னாட்களில் சபைகள் எபேசு, சிமிர்னா, தியத்தீரா, சர்தை, பெர்கமு, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்ற பட்டணங்களில் காணப்பட்டது. ஆகையால் வீடுகளில் தான் ஆராதிக்க வேண்டும், அதுதான் வேதத்தின் வெளிப்பாடு என்றால் நம்பாதிருங்கள். ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்ற பெயர் வேதத்தில் சுமார் ஆறு முறை வருகிறது, அவைகளில் பாதி முறை பிரிஸ்கில்லா(பிரிஸ்கா), ஆக்கில்லா என்று மனைவியை முதன்மைப் படுத்தி எழுதப்பட்டிருக்கும். ஒருவேளை அவள் புருஷனைப் பார்க்கிலும் அதிகமாய் கர்த்தருடைய பணியை உற்சாகமாகச் செய்திருக்கக் கூடும். கர்த்தருடைய பிள்ளைகளே, குடும்பமாகக் கர்த்தரைச் சேவியுங்கள், உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி காணட்டும். சிலர் தங்களை விசுவாசிகள் என்று கூறுவார்கள், ஆனால் அனேக வருஷங்கள் ஒரே நிலையில் வளர்ச்சியற்றவர்களாகக் காணப்படுவார்கள், அப்படிப்பட்டவர்களில் கர்த்தர் பிரியம் வைப்பதில்லை. ஆகையால் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா குடும்பத்தைப் போல ஆவிக்குரிய வளர்ச்சியடையவும், தொடர்ந்து கர்த்தரைப் பின்பற்றி ஓடவும், உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கிருபைச் செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar