சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம் (சங்கீதம் 126:1).
யூதாவின் ஜனங்கள் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த வேளையில் பாடின ஆரோகண சங்கீதமாய் மேற்குறிப்பிடப்பட்ட சங்கீதம் காணப்படுகிறது. எழுபது வருட அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது அவர்களுக்குச் சொப்பனம் போல, நம்பக்கூடாததாகவும், ஆச்சரியமாகவும் காணப்பட்டது. பாபிலோனியச் சிறையிருப்பு முடிவுக்கு வரும் என்ற வாக்குத்தத்தத்தை அறிந்தவர்கள் தான், ஆனால் அது திடீரென்று நடந்த வேளையில் அவர்களுடைய வாய் நகைப்பினாலும், நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவது போல, கர்த்தர் அவர்களுடைய சிறையிருப்பைத் திருப்பினார்.
கர்த்தருடைய சபையின் ஜனங்களாகிய நீங்கள் தான் அவருடைய சீயோன். கர்த்தர் உங்கள் எல்லா சிறையிருப்புகளைத் திருப்புகிற வேளை வந்திருக்கிறது. தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது (சங். 102:13). உங்கள் சிறையிருப்பை மாற்றுவதற்குக் கர்த்தர் ஒரு காலத்தையும், நேரத்தையும் வைத்திருக்கிறார். அந்த வேளையில் நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்வார். பாவத்தினாலும், வியாதிகளினாலும், பலவிதமான தேவைகளினாலும், பற்றாக்குறைகளினாலும் உண்டாகும் எல்லா சிறையிருப்புகளையும் கர்த்தர் உங்களை விட்டு விலக்குவார். குமாரன் உங்களை விடுதலையாக்கும் போது, மெய்யான விடுதலை உங்களுக்கு உண்டாகும்.
எரோது ராஜா, பேதுருவை சிறைச்சாலையில் அடைத்து வைத்தான், பஸ்கா பண்டிகையின் நாட்களுக்குப் பிறகு, யாக்கோபைப் போலப் பட்டயத்தினால் இவனையும் கொலைச் செய்வதற்குத் தீர்மானித்திருந்தான். ஆனால் சபை மக்கள் பேதுருவுக்காக ஊக்கமாய் ஜெபித்தார்கள், கர்த்தருடைய தூதன் அங்கே வந்து சிறைச்சாலையில் நின்றான், அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. தூதன் அவனை நோக்கி, உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான், பேதுரு அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி, உன் வஸ்திரத்தைப்போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங் காண்கிறதாக நினைத்தான். அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது, அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள், உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும் படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். கர்த்தருடைய பிள்ளைகளே, பேதுருவை விடுவித்த தேவன், உங்கள் ஜெபங்களை கேட்டு உங்கள் சிறையிருப்பிலிருந்து விடுவிப்பது நிச்சயம். கண்ணீரோடு விதைக்கிற நீங்கள் கெம்பீரத்தோடு அறுக்கும் வேளை வருகிறது. ஆகையால் சோர்ந்து போகாதபடி, கர்த்தருக்குள் மகிழ்ச்சியோடு காணப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar