ஏசா 49:20. பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிகாலத்தை குறித்து வேதாகமம் எடுத்து காட்டுகிறது. மேற்குறிப்பிட்ட வசனம் எதிகாலத்தை குறித்து சொல்லுகிறது. உலகில் அநேகர் தங்களுடைய எதிர் காலம் எப்படி இருக்குமோ என்று அறிய பல ஜோசியக்காரர்களை அணுகுவார்கள். பெருந்தொகையை கொடுத்து தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், தொழில் காரியங்கள் எப்படி இருக்கும் என்று அறிய முற்படுவார்கள். இப்படியாக ஒரு பெற்றோர் தன் மகளுக்கு திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்று அறிய ஒரு ஊரில் ஜோசியக்காரரை அணுகினார்கள். அவன் சொன்னான் உங்கள் மகளுக்கு சனிப்பெயர்ச்சி என்று சொல்லி அனுப்பிவிட்டான். அந்த பெற்றோர்கள் மற்றொரு ஜோசியக்காரரை அணுகினார்கள், அவன் சொன்னான் உங்கள் மகளுக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் சரியாக உள்ளது. குறிப்பிட்ட நபரிடம் சரியாக பத்து பொருத்தமும் பொருந்துகிறது என்று சொல்லி அனுப்பிவிட்டான். பெற்றோர்களுக்கு ஒரே குழப்பம் என்ன செய்வது, யார் சொல்லுவதை நம்புவது என்று அறியமுடியவில்லை. இப்படித்தான் உலகத்தில் உள்ள நபர்கள் தங்கள் எதிர்காலத்தை சொல்லிவிடுவார்கள் என்று அணுகுவது வீண் குழப்பத்தை கொண்டுவரும். மாத்திரமல்ல, அது வேதத்திற்கு ஒவ்வொத காரியம். தேவ ஜனங்கள் எப்பொழுதும் எல்லாவற்றிலும் நமக்கு வேதம் என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை காண வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வசனம் சொல்லுகிறது தற்போது பிள்ளைகளற்ற சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. காரணம் கர்த்தர் எல்லாவற்றிற்கும் நேரங்களையும் காலங்களையும் வைத்திருக்கிறார். அதினதின் காரியத்தை அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்வதில் நம் தேவனுக்கு ஒப்பாக யாரையும் நாம் கூறிவிட முடியாது. வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் நம் நினைவுகளும் அவர் நினைவுகளும். ஆகையால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலை தான் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரம் என்று தீர்மானித்துவிடாதிருங்கள். வசனம் சொல்லுகிறது பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள் என்பதாக. ஒரு காலத்தில் ஆபிரகாமுக்கு பிள்ளைகள் இல்லாமல் இருந்தது, ஒரு காலத்தில் அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லாமல் இருந்தது; ஆனால் அது அவர்களுக்கு நிரந்தரமான சூழ்நிலையாக முடியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு அருமையான பிள்ளைகளை கொடுத்து கனப்படுத்தினார்.
மாத்திரமல்ல, இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு கர்த்தர் உங்களை எதிர்காலத்தில் ஆசீர்வதிப்பார். இப்பொழுது இருப்பதை பார்க்கிலும் பல மடங்கு ஆசிர்வதித்து உயர்த்துவார். வேலை காரியங்கள் ஆனாலும் சரி, ஊழிய காரியங்கள் ஆனாலும் சரி, இடம் இல்லாமல் போகுமட்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார் என்று மற்றவர்கள் சொல்லுவதை உங்கள் காதுகள் கேட்கும்படியாக கர்த்தர் செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar