கண்கள் சரீரத்தின் விளக்கு (The eye is the lamp of the body).

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது,    உன் கண் தெளிவாயிருந்தால்,    உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.  உன் கண் கெட்டதாயிருந்தால்,    உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால்,    அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! (மத். 6:22,   23).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/xt7QR_lgDLo

இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் கண்கள் சரீரத்தின் விளக்கு என்று உபதேசித்தார். கண்கள் தான் நம்முடைய இருதயத்திற்கும் மனதிற்கும் நுழைவாயிலாகக் காணப்படுகிறது. கண்கள் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். கண்கள் நல்ல காரியங்களைப் பார்த்து,    நல்ல வழிகளில் நடந்தால்,    நம்மில் நல்ல சுபாவங்கள் வெளிப்படும்,    ஆனால் தீயக் காரியங்களைப் பார்த்து,    தீயவழிகளில் நடந்தால் தீய சுபாவங்கள்   வெளிப்படும்.  

சர்ப்பம் தன்னுடைய தந்திரத்தினால் ஏவாளை வஞ்சித்து விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசிக்க ஏவினது.  அவள்,    நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் புசிப்புக்கு நல்லதும்,    பார்வைக்கு இன்பமும்,    புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டாள். ஆகையால் அதின் கனியைப் பறித்து,    புசித்து,    தன் புருஷனுக்கும் கொடுத்தாள்,    அவனும் புசித்தான். அவர்கள் மூலமாக  மனுகுலத்திற்குள் பாவமும்,    வேதனையும்,    வியர்வை சிந்துதலும் கடந்துவந்தது.   ராஜாக்கள் யுத்தம் செய்கிற காலத்தில் தாவீது,    சோம்பலின் நிமித்தமாக  யுத்த  களத்திற்குப்  போவதற்குப்  பதிலாக  எருசலேமில் தன் அரண்மனையிலிருந்து விட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து,    அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது,    ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்,     அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். கண்களின் பார்வை அவனுக்குள் இச்சையைக் கொண்டு வந்தது. அவள்  ஏத்தியனாகிய உரியாவின் மனைவி என்பதை அறிந்தும்,    பிறன் மனைவியை இச்சியாதிருப்பாயாக என்ற பிரமாணத்தை மீறி,    தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி,    அவளை அழைத்து,    அவளுடன் பாவத்தைச் செய்தான். அந்த பாவத்தின் நிந்தையை அவன் வாழ்க்கை முழுவதும் சுமந்தான். சிம்சோன்,    அவன்  கண்களுக்குப்  பிரியமான  பெலிஸ்திய ஸ்திரீயை தன் மனைவியாகக் கொண்டதினால்,    கண் பிடுங்கப்பட்டவனாக,    வேடிக்கை காட்டுகிறவனாய் மாறிப்போனான்.

யோபு தன் கண்களோடு உடன்படிக்கைச் செய்திருந்தான்,    ஆகையால் எந்த கன்னிகைகள் மேலும் அவன் நினைவாயிருக்கவில்லை (யோபு 31:1). ஆகையால் அவன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருந்தது. இரட்டிப்பான நன்மையை கர்த்தரிடத்திருந்து பெற்றுக் கொண்டான்.  போத்திபாரின்  மனைவி,    வாலிபனாகிய  யோசேப்பை  தன்னோடு  பாவஞ்செய்த  தூண்டியபின்னும் கூட,    அவன் கர்த்தருக்குப் பயந்து,    பாவஞ்செய்கிற சூழ்நிலையை விட்டு விலகி ஓடினான். ஆகையால் தன் சரீரத்தைப் பாவத்திற்கு விலக்கி,    காத்துக் கொண்டான். ஆகையால் பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் கர்த்தரால் உயர்த்தப்பட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் கண்களோடு உடன்படிக்கைப் பண்ணிக் கொள்ளுங்கள்,    உங்கள் கண்கள் தெளிவாக இருக்கட்டும்,    வீணான காரியங்களைப் பார்க்காதிருங்கள். உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால்,    அதைப் பிடுங்கி எறிந்துபோடு,    உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,    உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும் (மத்.5:29) என்ற ஆண்டவருடைய வார்த்தையை மறந்து போகாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *