எது மாசில்லாத சுத்தமான பக்தி?

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்,    உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக்கோபு 1:17).

தேவன்,    பக்தியுள்ளவனை தமக்காகத் தெரிந்து கொண்டார் என்று வேதம் கூறுகிறது. தாவீது,    ஆண்டவரை நோக்கி என் ஆத்துமாவைக் காத்தருளும்,    நான் பக்தியுள்ளவன் என்று வேண்டுதல் செய்தார். யோனா,    கர்த்தரை விட்டு விலகி நினிவேக்கு போவதற்குப் பதிலாக,    தர்ஷீசுக்கு ஓடிப்போன வேளையிலும் கூட நீ யார் என்று மாலுமி கேட்ட வேளையில்,    சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்   என்று தன்னைக்குறித்துக் கூறினான். ஆனால் மாசில்லாத,    சுத்தமான தேவபக்தி என்ன என்பதைக் குறித்து மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகையில்,    திக்கற்ற பிள்ளைகளை விசாரிப்பதும்,    விதவைகளை விசாரிப்பதும்,    உலகத்தால் கறைபடாதபடி தன்னைக் காத்துக்கொள்வதுமாயிருக்கிறது.

தேசத்தில்; எளியவர்கள் இல்;லாமல் இருப்பதில்லை என்று உபா.15:11ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவும் தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்;(மத். 26:11) என்றார். எதற்காய் ஏழைகளைக் கர்த்தர் தேசங்களில் நம் நடுவில் வைத்திருக்கிறார்? இருக்கிற கர்த்தருடைய பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. உங்களுடைய விஷேசித்த நாட்களிலும்,    பண்டிகை நாட்களிலும் எளியவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன்  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்,    தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்,    அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்,    வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்,    வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள்,    காவலிலிருந்தேன் என்னைப் பார்க்கவந்தீர்கள் என்று இயேசு கூறின வேளையில்,    நாங்கள் எப்பொழுது உம்மை இந்த நிலையில் கண்டோம் என்றபோது,    மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ,    அதை எனக்கே செய்தீர்கள் என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்து விடாதிருங்கள். ஏழைகளையும்,    கைவிடப்பட்டவர்களையும் கர்த்தர் தன்னுடைய சகோதரர்களாகக் கருதுகிறார்,    அவர் திக்கற்றப் பிள்ளைகளின் தகப்பன்.

யோபு நன்கு வாழ்ந்திருந்த நாட்களில் ஏழைகளுக்கு அதிகமாக உதவிசெய்தார். தாய் தகப்பனில்லாத பிள்ளைகள் அவனுடைய ஆகாரத்தில் சாப்பிட்டார்கள்,    அவர்கள் தங்கள் தகப்பனிடத்தில் வளர்வதுபோல யோபுவோடு வளர்ந்தார்கள்,    அவர்களுக்கு கைலாகு கொடுத்து நடத்தினான். ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும்,    ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் அவன் கண்டபோது,    அவர்களுக்கு ஆட்டுமயிர்க் கம்பளியைக் கொடுத்தான். முறையிடுகிற ஏழையையும்,    திக்கற்ற பிள்ளையையும்,    உதவியற்றவனையும் இரட்சித்தான்,    குருடனுக்குக் கண்ணும்,    சப்பாணிக்குக் காலுமாயிருந்தான்,    எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தான் என்றும் வேதம் கூறுகிறது. விதவைகள் படுகிற உபத்திரவத்திலேயும் அவர்களுக்கு உதவிச் செய்தான்,    அவர்களின் இருதயத்தைக் கெம்பீரிக்கப் பண்ணினான். அதுபோல உலகத்தால் கறைபடாதபடி தன்னைக் காத்துக்கொண்டான். என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? ;(யோபு 31:1). என்று கேட்டு,    கர்த்தருக்கு பயந்து ஜீவித்தான். தன் பிள்ளைகள்  பாவஞ்செய்து,    தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று நினைத்து,    அவர்களை அழைத்து,    பரிசுத்தப்படுத்தி,    அதிகாலமே எழுந்து அவர்களுடைய இலக்கத்தின்படி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறவனாகவும் காணப்பட்டான்.

யோபு ஏழைகளுக்கு உதவி செய்து,    விதவைகளை விசாரித்து,    தன்னையும் தன் பிள்ளைகளையும் பரிசுத்தத்தோடு காத்துக் கொண்டதினாலே,    அவனுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து துக்கத்தோடு காணப்பட்ட வேளையிலும்,    வியாதியினால் வந்த வேதனையின் நேரத்திலும் கர்த்தர் அவனைத் தாங்கினார். அவன் கர்த்தரை நோக்கி,    சுமித்திரையான தராசிலே நீர் என்னை நிறுத்தி,    என் உத்தமத்தை அறியும் என்று முறையிட்ட பொழுது,    கர்த்தர் அவனை நிறுத்துப் பார்த்து அவனை மாசில்லாத,    சுத்தமான பக்தியுடையவனாய் கண்டார். ஆகையால்,    அவன் இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாய் கொடுத்து,    அவனைக் கனப்படுத்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் திக்கற்றப் பிள்ளைகளுக்கு உதவிசெய்து,    விதவைகளை விசாரித்து,    உலகத்தால் கறைபடாதபடி உங்களைக் காத்துக் கொண்டு ஜீவிக்கும் போது கர்த்தர் உங்களையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார். சிறுமைப் பட்டவன் மேல் சிந்தையுள்ள உங்களைக் கர்த்தர் பாக்கியவானாய் மாற்றுவார். உங்கள் வியாதிகளை உங்களை விட்டு விலக்கி,    உங்களைப் பாதுகாத்து,    உங்கள் சத்துருக்களுக்கு முன்பு உங்களுக்குப் பந்தியை ஆயத்தப்படுத்திக் கனப்படுத்தி  ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *