நமது தெரிவுகள்  (Our Choices).

அப்பொழுது லோத்து தன் கண்களை  ஏறெடுத்துப்பார்த்து:  யோர்தான் நதிக்கு அருகான சமப பூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர்  சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே,     சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது (ஆதி. 13:10).

ஆதியிலிருந்து கர்த்தர் மனுகுலத்திற்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தார். நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதிலிருந்துதான்,     நம்முடைய நித்தியம் காணப்படுகிறது. கர்த்தர்,     ஏதேனில்  ஜீவவிருட்சத்தையும்,     நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் வைத்து,     ஆதிப்பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் எல்லா விருட்சத்தின் கனிகளையும் புசிக்கலாம் என்றும்,     ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கலாகாது என்றும் கட்டளையிட்டார். அவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்து நீடித்த நாட்களாக ஜீவிப்பதைத்  தெரிந்து கொள்ளுவதற்குப் பதிலாக,     கீழ்ப்படியாமையினால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து,     சுய விருப்பத்தின்படி;  ஜீவிப்பதைத் தெரிந்துகொண்டார்கள். ஆகையால் தேவனுடைய சமூகத்திலிருந்து,     ஏதேனிலிருந்து  துரத்தப்பட்டார்கள்.  யூதாவின் ஜனங்களுக்கு முன்பாக  ஜீவவழியையும்  மரணவழியையும்  கர்த்தர் வைத்தார் (எரே. 21:8). அவர்கள் ஜீவவழியாகிய ஆண்டவரைத் தள்ளி மரணவழியைத் தெரிந்தெடுத்தார்கள்,     ஆகையால் கர்த்தர் அவர்களை நேபுகாத்நேச்சாரிடம் விற்றுப் போட்டார். இயேசுவும் கூட ஜீவனுக்குப் போகிற வழியையும்,     வாசலையும் நமக்கு முன்பாக வைத்தார்,     அதோடு கேட்டுக்கு போகிற வழியையும் வாசலையும் வைத்தார். நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதிலிருந்து தான் நித்திய ஜீவனுக்குள்ளாகவும்,     நித்திய அக்கினிக்குள்ளாகவும் போவது நிர்ணயம் பண்ணப்படுகிறது.

லோத்து,     ஆபிரகாமுடைய சகோதரன் மகன். ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றார். ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன் மனைவியாகிய சாராளோடு புறப்பட்டான்,     அவர்களோடு லோத்துவும்   புறப்பட்டான். கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்து,     மிருக ஜீவன்களும்,     வெள்ளியும்,     பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாக மாற்றினார். லோத்தும் ஆபிரகாமோடு காணப்பட்டதினால்,     ஆபிரகாமினிமித்தம் கர்த்தர் லோத்தையும் ஆசீர்வதித்தார். நீங்கள் கர்த்தருக்குப் பயந்தவர்களோடு ஐக்கியமாகக் காணப்படுகிற வேளையில்,     அவர்கள் நிமித்தம் கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.

ஆபிரகாமும்,     லோத்தும் ஒருமித்துக்  குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது,     அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால்,     அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. அத்துடன்,     இரண்டு பேருடைய மந்தை மேய்ப்பர்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாயிற்று. அப்பொழுது ஆபிரகாம் லோத்தைப் பார்த்து,     எனக்கும் உனக்கும்,     என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்,     நாம் சகோதரர்.  இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டுப் பிரிந்துபோகலாம்,     நீ இடதுபுறம்போனால்,     நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால்,     நான் இடதுபுறம் போகிறேன் என்றான். அப்பொழுது லோத்து தன் கண்களை  ஏறெடுத்துப்பார்த்து,      யோர்தான் நதிக்கு அருகான  சம பூமியாகிய சோதோமும்,     கோமோராவும்   நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான்,     அவைகள் அந்நாட்களில் கர்த்தருடைய தோட்டமாகிய ஏதேனைப் போலவும்,     எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. லோத்து,     ஆபிரகாமோடு காணப்படுகிற ஐக்கியத்தின் மேன்மையை உணராமலும்,     தேவ சித்தத்தை அறியாமலும்,     தன் கண்கள் இச்சித்த சோதோமை தெரிந்தெடுத்தான். சோதோம் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியாமலிருந்தான். அவனுடைய பிள்ளைகள் கூட பின்னாட்களில் சோதோமின் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டு,     மோவாப்,     அம்மோன் என்ற துன்மார்க்க சந்ததிகளைப் பெற்றெடுப்பதற்கு அவன் காரணமாகிவிட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் தெரிவுகள் மிகவும் முக்கியமானது. ஆண்டவருடைய சத்தத்தையும்,     சித்தத்தையும் தெளிவாய் அறியாதபடி உங்களுடைய மாமிசத்தில் எடுக்கிற தீர்மானங்கள் உங்களுக்கும்,     உங்கள் பிள்ளைகளுக்கும் கேடுண்டாக்கும். அனேக வேளைகளில் ஆண்டவர் பேசினார் என்று கூறிக்கொண்டு தவறான முடிவுகளை எடுக்கிற கர்த்தருடைய ஜனங்கள் உண்டு. நல்ல ஆவிக்குரிய ஐக்கியத்தோடு காணப்படும் போது,     தூரத்தில் உங்களுக்குப் பகட்டாகவும்,     நன்மையாகவும் தோன்றுகிற காரியங்களுக்காக நல்ல ஐக்கியத்தை இழந்து விடாதிருங்கள். நம்முடைய தெரிவுகளும்,     தேர்ந்தெடுப்புகளும் சில வேளைகளில் நித்தியத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆகையால் லோத்தைப் போல ஒருபோதும் தவறான தீர்மானங்களை எடுக்காமல்,     எல்லாவற்றையும் ஆவியானவருடைய தெளிவான நடத்துதலின் பேரில் தேர்வு செய்யுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *