ஏசா 54 :13,14 . உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
ஆண்டவர் எப்பொழுதும் சந்ததிகளை ஆசிர்வதிக்க பிரியமாயிருப்பவர். காரணம் பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் ஈவாய் காணப்படுகிறது. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள்; அவர்களை தடை செய்யாதிருங்கள் என்று இயேசு கூறினார். ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களெக்கென்று தேவ தூதர்களை நியமிக்கிற நல்ல தகப்பன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களை போல பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்களித்தார். என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆண்டவர் தாவீதுக்கு ஆணையிட்டார் (சங் 89:4).
அதுபோல தான் கர்த்தர் உங்கள் சந்ததியையும், உங்கள் பிள்ளைகளையும் ஆசிர்வதிக்கிறவர். மேற்குறிப்பிட்ட வசனத்தை உங்களுக்கு உரியதாக்கி கொள்ளுங்கள். விசுவாசத்தோடு உங்கள் பிள்ளைகளை பார்த்து இயேசுவின் நாமத்தில் பேசுங்கள்.
உலகத்தில் அநேக விதமான போதனைகள், மனிதனின் மூளையை, இருதயத்தை, சிந்தையை திசை திருப்ப செய்கிற அநேக விதமான போதனைகள் வந்துவிட்டது. ஆனால் உங்கள் பிள்ளைகளோ இயேசுவின் நாமத்தில் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.
உலகம் முழுவதும் சமாதான குறைச்சல்கள், தனிமையுணர்வு, நிந்தைகள், போராட்டங்கள் இருந்தாலும், இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாய் இருக்கும்.
துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றி திரிகிற இந்நாட்களில், பொல்லாதவர்களின் கூட்டம் இயேசுவை சுற்றி வளைந்துகொண்டது போல பெருகி இருக்கிற இந்நாட்களில், இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகள் நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பார்கள்.
மற்றவர்களின் காலை வாரிவிடுதல், மற்றவர்களை விழத்தள்ளுதல் போன்ற காரியங்களையே நடப்பிக்க துடிக்கும் கொடுமைக்காரர்கள் எங்கும் இருக்கிற இந்நாட்களில் இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகள் கொடுமைக்கு தூரமாவார்கள்.
எதிர்காலத்தை குறித்த பயம், மரணத்தை குறித்த பயம், கொள்ளை வியாதிகளை குறித்த பயம் இந்நாட்களில் முதியவர்களை மாத்திரம் அல்ல இளைஞர்களையும் பாதித்திருக்கிற இந்நாட்களில், இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகள் பயமில்லாதிருப்பார்கள்.
ஒரே நாளில் ஏழாயிரத்திற்கும் அதிகமாக வேலையிழப்பை செய்யும்படியாக மிக பெரிய நிறுவனத்தினிமித்தம் வருகிற திகில், எதிர்பாராத செய்திகளின் நிமித்தம் வருகிற திகில் போன்றவற்றிக்கு இயேசுவின் நாமத்தில் உங்கள் பிள்ளைகள் தூரமாய் இருப்பார்கள். இவைகள் ஒன்றும் உங்கள் பிள்ளைகளை அணுகுவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த வாக்குத்தத்த வார்த்தை உங்கள் பிள்ளைகளுக்குரியது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar