சங் 128:2. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
கர்த்தர் கொடுக்கும் எந்த வேலையாக இருந்தாலும் மனப்பூர்வமாய் செய்யுங்கள். நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1 கொரி 10:31). ஒரு நபர் சொன்னார் நான் சம்பாதிப்பதெல்லாம் எங்கே செல்லுகிறது என்றே தெரியவில்லை. சம்பளம் கிடைத்து இரண்டு மூன்று நாட்களில் எல்லாம் செலவழிந்து போகிறது. மற்றொருவர் சொன்னார் நான் வாங்கும் சம்பளம் அதிகம் என்பதால் அதை அறிந்து என் உறவினர்கள் அனைவரும் கடன் கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் நிர்பந்தம் வருவதால் கொடுக்கிறேன். ஆனால் கொடுத்த பணம் ஒன்றும் திரும்பி வருவதில்லை என்பதாக. இன்னும் ஒரு நபர் சொன்னார் நான் வாங்கும் சம்பளம் அனைத்தும் மருத்துவ செலவுகளுக்காகவே செல்கிறது. எனக்கு மற்றும் என் குடும்பத்தினருக்கு வரும் எதிர்பாராத விபத்துகள், வியாதிகளுக்கு செலவு செய்வதே பெரிய பாரமாக உள்ளது என்பதாக.
இப்படி அநேகருக்கு வேண்டாத வழியில் பணம் செலவழிந்து போகிறது. ஆனால் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் வார்த்தை உங்கள் கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீர்கள். மற்றவர்கள் அல்ல, எதிர்பாராத காரியங்கள் அல்ல; நீங்களே சாப்பிடுவீர்கள். வீண் செலவுகளை தவிர்க்கும்படி கர்த்தர் செய்வார். உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும் (நீதி 16:3). சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு (நீதி 14:23)என்று சாலொமோன் ஞானி சொல்லுகிறதை பார்க்கலாம். பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும் (2 தீமோ 2:6) என்று பவுல் தன் உத்தம குமாரனுக்கு சொல்லுவதை பார்க்கலாம்.
உங்கள் வேலை ஸ்தலங்களில் உங்களுக்கு பாக்கியமும் நம்மையும் உண்டாகும். யோசேப்பு இருந்த இடத்தில் பஞ்சம் வந்தது. தேசம் முழுவதும் பஞ்சம். தேசத்தின் தலைவர்கள், பார்வோன் என்ன செய்வதென்று அறியாது இருந்தார்கள். யோசேப்பு எந்த இடத்திலும் இருந்தாலும் முறுமுறுக்காமல் உண்மையும் உத்தமமாக வேலை செய்ததை கர்த்தருடைய கண்கள் கண்டது. பின்பு எல்லாருக்கும் மேலாக கர்த்தர் அவனை உயர்த்தினார். தேசத்திலிருக்கும் பஞ்சத்தையெல்லாம் கையாளத்தக்க ஆற்றலை கர்த்தர் கொடுத்தார். ஈசாக்கின் காலத்தில் பஞ்சம் வந்தது. ஆனால் அவன் கையிட்டு செய்த வேலையை கர்த்தர் ஆசீர்வதித்தார். எல்லாரும் எதிர்த்து நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா விசுவாசத்துடன் எதை செய்தாலும் கர்த்தருடைய மகிமைக்காக செய்யுங்கள். நீங்கள் கையிட்டு செய்யும் வேலையை கர்த்தர் ஆசீர்வதிப்பார். பாக்கியமும் நன்மையையும் உண்டாகும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar