ஏசா 54:17. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gm-_nJq4Cro
மேற்குறிப்பிட்ட வசனம் எல்லாருக்கும் பிரியமானது. ஆனால் குறிப்பாக கர்த்தருடைய ஊழியர்கள் மாத்திரமே இந்த வசனத்தை சுதந்திரித்துகொள்ள முடியும். இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரம் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஊழியக்காரர் என்றால் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் மாத்திரமே என்று எண்ணிவிடாதிருங்கள். கர்த்தருடைய பணிகள் சிறியதோ பெரியதோ எதுவாயிருந்தாலும் அது கர்த்தருடைய ஊழியமாய் காணப்படுகிறது. அவருடைய இராஜ்யத்தை கட்ட என்னென்ன விதத்தில் நீங்கள் உழைக்கிறீர்களோ, உதவி செய்கிறீர்களோ அவைகள் அனைத்தும் கர்த்தருடைய ஊழியம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட ஊழியக்காரர்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார் உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்பதாக. ஆபிரகாமின் மனைவி சாராள் அழகுள்ளவள் என்று கண்டு பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். ஆபிரகாமால் உள்ளே நுழைந்து அவளை காப்பாற்ற முடியவில்லை. யாருமே கடந்து சென்று விடுவிக்க கூடாத நிலையில் ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ சத்துரு அநேக கண்ணிகளை வைக்கலாம்; அவைகளிலிருந்து விடுவிக்க உங்களால் முடியாமல் காணப்படலாம். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் உங்களுக்கு எதிராக வருகிற ஆயுதங்கள் ஏதுவாக காணப்பட்டாலும் வாய்க்காதே போகும். ஜனங்கள், அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகள், துன்மார்க்கரின் வெறிச்செயல்கள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் வாய்க்காதே போகும்.
மாத்திரமல்ல, உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். மொர்தெகாய்க்கு எதிராக ஆமான் பல திட்டங்களை தீட்டினான். அவனை அழிக்கும்படி வகைதேடினான். ஆனால் ஆண்டவர் மொர்தெகாயை உயர்த்தி ஆமானை அழித்துப்போட்டார். அதுபோல உங்களுக்கு எதிராக பேசுகிற நாவுகள் அனைத்தையும் நீங்கள் குற்றப்படுத்துவீர்கள்.
இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரம். என் ஊழியக்காரர் என்று கர்த்தர் உரிமையோடு ஏசாயா 65ம் அதிகாரத்தில் பல இடங்களில் சொல்லுவதை பார்க்கலாம். என் ஊழியக்காரரினிமித்தம் திராட்சக்குலையை (ஜனங்களை) அழிக்காதபடி செய்வேன்(ஏசா 65:8). என் ஊழியக்காரர்கள் யூதாவின் வாசம்பண்ணுவார்கள் (ஏசா 65:9). இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள் (ஏசா 65:1314) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதுவரை கர்த்தருடைய பணியை செய்ய பல வாய்ப்புகள் இருந்தும் செய்யவில்லையே என்று சொல்லுகிறவர்கள் இன்று ஒரு தீர்மானத்தை எடுங்கள். சபையில் இருக்கும் கர்த்தருடைய ஊழியத்தை முன்வந்து செய்யுங்கள்; இருக்கும் இடங்களில் கர்த்தருடைய பணியை நிறைவேற்றுங்கள். அப்பொழுது மேற்குறிப்பிட்ட வாக்குத்தத்ததை சுதந்தரித்துகொள்ளுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar