சேனைகளின் கர்த்தர்.

எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது (ஏசாயா 47:4).

நம்முடைய தேவனுடைய நாமங்களில் ஒன்று  யெகோவா  சபயோத் என்பது,    அந்த நாமத்தின் அர்த்தம் சேனைகளின் கர்த்தர் என்பது. அவர் நம்முடைய இராணுவங்களின் தேவன்,    தம்முடைய தூதர் சேனைகளோடு இறங்கி,    நமக்காய் யுத்தம் செய்து,    நம்மை விடுவிக்கிறவர். அன்னாள்,    முதல் முதலாகத் தேவனைச் சேனைகளின் கர்த்தர் என்று அழைத்தாள். சேனைகளின் கர்த்தாவே,    தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து,    உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,    உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால்,    அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள் (1 சாமு. 1:11). அவளுடைய சக்களத்தியாகிய பெனின்னாள்,    அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லாததினால்,    வார்த்தைகளாலும் செயல்களினாலும் அவளோடு யுத்தம் செய்தாள்,    அதினிமித்தம் கர்த்தர் தனக்காக யுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னாள் அவரை சேனைகளின் கர்த்தர் என்று அழைத்தாள்.

நமக்கு ஒரு போராட்டம் உண்டு என்று வேதம் கூறுகிறது. அந்த போராட்டத்தில் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்,    சில வேளைகளில் எதிரி கை ஓங்குவது போலத் தெரியும்,    ஆனாலும் முடிவில் கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுப்பார். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்,    நீங்கள் சும்மாயிருப்பீர்கள் (யாத். 14:14) என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். சீரிய தேசத்தின் ராஜா,    எலிசா தீர்கதரிசியை பிடிப்பதற்காக,    தன்னுடைய இராணுவத்தை அனுப்பினான். காலையில்,    எலிசாவின் வேலைக்காரன் மலை முழுவதும் இராணுவங்களாலும்,    குதிரைகளாலும்,    இரதங்களினாலும் நிறைந்திருந்ததைக் கண்டு ஐயோ என் ஆண்டவனே,    என்ன  செய்வோம் என்று அங்கலாய்த்தான். அந்த வேளையில்,    இவனுடைய கண்களைத் திறக்கும் படிக்காக எலிசா தீர்க்கதரிசி ஜெபம் செய்தான். அப்போது கர்த்தருடைய இராணுவம் அவர்களைச் சுற்றிலும் காணப்படுவதை எலிசாவின் வேலைக்காரன் கண்டான். அதுபோல  கர்த்தர் உங்களைச் சூழ பாளையம் இறங்கி உங்களை பாதுகாப்பார். நட்சத்திரங்கள் கூட தங்கள் பாதைகளிலிருந்து உங்களுக்காக யுத்தம் செய்யும். கல்மழையைப் பொழியப் பண்ணி கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுப்பார்,    இரைச்சலின் சத்தத்தை அனுப்பி,    எதிரிகளைக் கலங்கடித்து,    பயந்து ஒடும்படிக்குச் செய்வார். அவர் யுத்தத்தில் வல்ல தேவன்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும்படி,     கர்த்தர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். அவர்கள் உங்கள் பாதங்கள் கல்லில்  இடறாதபடிக்கு தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். உன்னைத் தொடுகிறவன் அவருடைய கண்ணின் மணியைத் தொடுகிறான்,    ஆகையால் பயப்படாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *