மத் 2:6. யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
சாலொமோனின் நாட்களில் இஸ்ரவேல் தேசம் இரண்டாக பிரிந்தது. யூதா என்றும் இஸ்ரவேல் என்றும் பிரிக்கப்பட்டது. பெத்லகேமிலிருந்து பிறக்கும் இயேசு இஸ்ரவேலை ஆளப்போவதாக இந்த வசனம் சொல்லுகிறது, யூதா மாத்திரமல்ல இஸ்ரவேலை ஆளப்போகும் பிரபு என்று வசனம் சொல்லுகிறது. இன்றைக்கு நாம் அனைவரும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறோம். நம்மை ஆளப் போகும் பிரபு, இயேசுவாக சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக இந்த உலகத்தில் பிறந்தார்.
இயேசு பூமியனைத்திற்கும் இராஜா. கடைசிகால எழுப்புதலுக்கு பின்பு, இயேசு தன்னுடைய மணவாட்டியாகிய சபையை எடுத்துக்கொள்வார். அதன் பின்பு இந்த உலகம் அந்திகிறிஸ்துவின் கையில் ஏழு வருடங்கள் ஒப்புக்கொடுக்கப்படும். அதன்பின்பு அவனுடைய இராஜ்யத்தை களைத்து, இயேசு எருசலேமை மையமாக வைத்து இந்த பூமியை ஆயிரம் வருடம் அரசாளுவார். இயேசு ஒருவர் தான் இந்த பூமியனைத்திற்கும் பிரபுவாக இருப்பார்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பெத்லகேமில் ஆளப்போகும் பிரபுவாக எப்படி இயேசு பிறந்தாரோ, அதுபோல நம் உள்ளத்தில் இன்று ஆளப்போகும் பிரபுவாக இயேசு பிறக்க வேண்டும். இயேசு சமாதான பிரபு என்று வசனம் சொல்லுகிறது. இயேசு உங்கள் உள்ளத்தில் ஆளப்போகும் பிரபுவாக இருப்பாரென்றால், நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் சமாதானத்தை கர்த்தர் கொடுப்பர். என் ஜனம் சமாதான தாபரங்களில் குடியிருக்கும் என்பது அவருடைய வாக்காய் காணப்படுகிறது.
உலகத்தில் அநேகர் உங்களை ஆளலாம். உலகத்தின் இராஜாக்கள், மந்திரிகள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்று அநேகர் உலகப்பிரகாரமாக ஆளலாம். ஆனால் இயேசு உங்களை ஆண்டுகொள்வதற்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பார், சமாதானத்தை கொடுப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

