அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிற படியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், அதனால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1 இரா. 20:28).
நம்முடைய எல்லா சூழ்நிலைகளுக்கும், கர்த்தர் தேவனாயிருக்கிறார். அனேக வேளைகளில், சில பிரச்சனைகள், வியாதிகள், இக்கட்டுகளிலிருந்து தான் நம்மை விடுவிப்பார் என்றும், எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிப்பதில்லை என்றும் கருதி கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்தி விடுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே, சிறிதும் பெரிதுமான எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிக்க வல்லமையுள்ளவர். அவர் நம்முடைய எல்லா நிலைமைகளுக்கும் தேவன் என்பதை நம்புங்கள்.
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு வந்து, சமாரியாவை முற்றிகை போட்டு அதன்மேல் யுத்தம் பண்ணினான், அவனோடே கூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமில்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது. அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது, உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று சொல்லச்சொன்னான். ஆகாபும் இஸ்ரவேலின் தேவனிடத்தில் விசாரியாமல், உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான். அவனுக்குக் கப்பம் கட்டி, அவன் கீழிருந்து ஆட்சி செய்ய ஒத்துக் கொண்டான். ஆனால் பெனாதாத் மீண்டும் ஆட்களை அனுப்பி, நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன், அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றான். அப்போது தான் எதிரி ஆக்கிரமிப்பு செய்ய வந்திருக்கிறான் என்பதை ஆகாப் புரிந்துகொண்டு அவனுக்கு எதிர்த்து நின்றான். ஆகாப் கர்த்தருக்குப் பிரியமில்லாத ஆட்சி செய்திருந்தும், அவனுடைய கடினமான நேரத்தில் கர்த்தர் அவனுக்குத் துணை நின்றார். நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும், அவர் உண்மையுள்ளவர். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை ஆகாபிடத்தில் அனுப்பி, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்லி, அப்படியே ஒப்புக் கொடுத்தார், அவர்களை யுத்தத்தில் வென்றார்கள். சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து, அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதனால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள், நாம் அவர்களோடே சமபூமியில் யுத்ததம்பண்ணினால் நல்லது, அப்பொழுது அவர்களை மேற்கொள்ளுவது நிச்சயம். ஆகையால் மறு வருஷத்தில் மீண்டும் சமபூமியில் யுத்தம் பண்ணுவதற்குத் திரும்பவும் வந்தார்கள். அந்த வேளையில், தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிற படியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், அதனால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்படியே மீண்டும் அவர்களை இஸ்ரவேலர்களின் கரங்களில் ஒப்புக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய தேவன் மலைகளுக்கும், சமபூமிக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் தேவன். சூழ்நிலைகள் ஆண்டவருடைய வல்லமையை மட்டுப்படுத்த முடியாது. உயர் மலைகளாக இருந்தாலும், மரண இருளின் பள்ளத்தாக்குகளாகக் காணப்பட்டாலும் கர்த்தர் உங்களோடு இருப்பார். கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தர திசையிலிருந்தும் உங்களுக்கு ஜெயம் வராது. உங்கள் ஜெயம் கர்த்தரிடத்திலிருந்து வரும். ஆகையால் உங்கள் எல்லா நிலையிலும் அவர் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள். அவர் உங்களை ஜெயமாக நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

